காணாமல் போன நிலா-சுபா
“நம்ம ரெண்டு பேருக்குள்ளயும் பிரச்சினை இல்ல.. ஆனா, முத்ராவை பக்கத்து போர்ஷன்ல வெச்சுக்கிட்டு எங்களால நிம்மதியா இருக்க முடியாது..
முன்கதை சுருக்கம்:
தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் அருணும், பூர்ணிமாவும் திருமணம் செய்து கொள்கிறார்கள். அருணின் நெருங்கிய நண்பனின் வீட்டை பார்வையிடும் பூர்ணிமா நாமும் கண்டிப்பாக சொந்த வீடு வாங்கியே தீர வேண்டும் என்கிறாள். அவர்களது கனவை நனவாக்கும் விதமாக தொலைக்காட்சி நிறுவனம் நடத்தும் போட்டியில் அருண் - பூர்ணிமா இருவரும் வெற்றி பெற்று வீட்டுமனையை பரிசாகபெற்று, அங்கு புது வீடு கட்டி குடியேறினார்கள்.
வீட்டின் ஒரு பகுதியை போட்டியில் பங்கேற்ற முத்ரா மூலம் வாடகைக்கு விடுவதற்கு ஏற்பாடு செய்கிறார்கள். இறுதியில் அருணுடன் போட்டியில் பங்கேற்ற முத்ரா ஒரு வீட்டிலும், சுந்தரம் என்பவர் மற்றொரு வீட்டிலும் வசிக்கிறார்கள். கர்ப்பிணியாக இருக்கும் பூர்ணிமாவுக்கு உதவியாக இருப்பதற்கு அவளை வளர்த்து ஆளாக்கிய தாயம்மா கிராமத்தில் இருந்து வருகிறாள். முத்ராவால் அருண் குடும்ப வாழ்க்கையில் குழப்பம் உருவாகிறது. இதையடுத்து முத்ராவை வீட்டை காலி செய்யுமாறு அருண் கட்டாயப்படுத்துகிறான். அவளோ அதற்கு மறுப்பு தெரிவிப்பதோடு தன்னிடம் தவறாக முயன்றதாக போலீசில் புகார் செய்வேன் என்றுஅருணை மிரட்டுகிறாள். முத்ராவால் சுந்தரமும் பாதிப்புக்குள்ளாகிறார். அவர் வீட்டை காலி செய்யப்போவதாக அருணிடம் கூறுகிறார்.
அருண் திடுக்கிட்டான்.
“ஏன் சார் நீங்க காலி பண்ணணும்..?” என்று பதறிய குரலில் கேட்டான்.
சுந்தரம் நடந்ததை சுருக்கமாகச் சொன்னார்.
“நம்ம ரெண்டு பேருக்குள்ளயும் பிரச்சினை இல்ல.. ஆனா, முத்ராவை பக்கத்து போர்ஷன்ல வெச்சுக்கிட்டு எங்களால நிம்மதியா இருக்க முடியாது.. உங்களுக்கு ஒரு வாரம் டயம் தரேன். முத்ராவை காலி பண்ணலைனா, நாங்க வேற வீடு பாத்துக்கிட்டுப் போகறதுதான் எங்க குடும்பத்துக்கு நல்லது..” என்று சொல்லிவிட்டு, சுந்தரம் விருட்டென்று எழுந்தார்.
“வா, கல்பனா..”
கல்பனா மனசில்லாமல் எழுந்து போனாள்.
“இவங்களைப் போல ஒரு நல்ல குடும்பம் நமக்கு மறுபடி கெடைப்பாங்களானு தெரியல..” என்று பூர்ணிமா சோகத்துடன் சொன்னாள்.
“எல்லாம் உன்னாலதான்..”
“ஏய், நான் என்ன செய்ஞ்சேன்..?”
“நீ அவளை பைக்ல பிக்கப் பண்ணிட்டுப் போனது பத்தி எங்கிட்ட மறைச்சிட்ட.. சுந்தரம் அவ துணி மடிச்சுத் தந்தப்ப ஈனு இளிச்சிருக்காரு.. இப்ப ரெண்டு பேரும் மாட்டிக்கிட்டு எங்க கழுத்தை அறுக்கறீங்க..” என்று பூர்ணிமா கடுமையான முகத்துடன் சொன்னாள்.
ஏதோ சொல்ல வாய் திறந்த அருண் எதுவும் இப்போது எடுபடாது என்று முகத்தைத் திருப்பிக்கொண்டான். பூர்ணிமா சற்றே கோபத்துடன் அந்த முகத்தைப் பிடித்துத் திருப்பி, அவன் கண்களுக்குள் பார்த்தாள்.
“அன்னிக்கு பல்பு மாத்தித் தரப்போனபோது என்ன நடந்தது..? எதையும் மறைக்காம சொல்லு..”
சமையலறை வாசலில் தாயம்மாவின் நிழலாடியதும், அருண் கோபமாக எழுந்தான்.
“இங்க எதுவும் சொல்ல முடியாது.. வேணும்னா, உள்ள வந்து கேளு..” என்று படுக்கையறைக்குள் போய்விட்டான்.
பூர்ணிமா வேகமாக உள்ளே போனாள். கதவை அறைந்து சாத்தினாள்.
“சொல்லு..”
“இனிமே தாயம்மாவை வெச்சுக்கிட்டு எங்கிட்ட கேள்வி கேக்காத..” என்றான், அருண், கடுப்பாக.
“படுக்கையறைக்குள்ள மட்டும் என்ன ரகசியம் வாழுதாம்..?” என்று பூர்ணிமா முணுமுணுத்தாள்.
“இதப்பாரு.. மறுபடியும் சொல்றேன்.. அந்த நைட்டி பத்தி முத்ராகிட்ட நான் சொல்லல.. சந்தேகம் வந்துட்டா, வாழ்க்கை நாசமாயிடும்..”
அருண் அவளருகில் அமர்ந்து அவளை மெலிதாக அணைத்துக்கொண்டான்.
“நான் சொல்றதுல ஒரு வார்த்தை கூட பொய்யில்ல..” என்று சொல்லிவிட்டு, பல்பு மாற்றித்தர முத்ராவின் வீட்டுக்குப் போனபோது அவள் நடந்து கொண்டது பற்றி சொன்னான்.
“எங்கிட்ட ஒரு ஆம்பிளை அப்படி நடந்துக்கிட்டா, அவன் கன்னத்துல ஓங்கி அறை விட்டிருப்பேன்.. நீ ஏன் அப்படி செய்யல..?”
அருணிடம் அந்தக் கேள்விக்கு பதிலில்லை.
“அட்லீஸ்ட் அன்னிக்கே நீ ஏன் எங்கிட்ட இதைச் சொல்லல..?”
அதற்கும் அவனிடம் பதிலில்லை.
“அப்ப நீ அதை ரசிச்சிருக்கே..!”
“இப்ப கோர்ட்ல நிக்க வெச்சு எனக்கு தண்டனை வாங்கித்தரப் போறியா, இல்ல, ஒரு தீர்வு கண்டுபிடிக்க முயற்சி செய்யலாமா..?” என்று அருண் காயப்பட்ட குரலில் கேட்டான்.
“என்ன தீர்வு வெச்சிருக்கே நீ..?”
“நாம தத்திமோகனைப் போய்ப் பாக்கலாமா..? அவன் வீட்டை வாடகைக்கு விட்டதுல, இந்த மாதிரி பலபேரைப் பார்த்திருப்பான்..”
சரி என்று தலையசைத்தாள், பூர்ணிமா.
* * *
அவர்கள் சொன்னதையெல்லாம் பொறுமையாகக் கேட்டுக்கொண்டான், மோகன்.
“கம்பெனினு சொன்னவுடனே சரின்னு சொல்லிடுவியா..? அந்த கம்பெனிக்கு ஒரு தடவையாவது நேர போய்ப்பாக்க முயற்சி பண்ணியிருந்தா, அவ பொய் புரிஞ்சிருக்கும்ல..?”
“தப்பு நடந்து போச்சு.. வருமானவரி இலாகாவுக்கு எழுதிப் போடுவேன், அது இதுன்னு பயமுறுத்தறாடா..” என்று அருண் கலங்கிய குரலில் சொன்னான்.
“அட முட்டாளே.. ஒப்பந்தத்துல போடாம பணம் வாங்கிட்டோமேனு யாராவது பயப்படுவாங்களா..? வாடகைப் பணம் தனி.. வாசல்ல லைட்டு போடறேன், லாரித் தண்ணி வாங்கறேன், மோட்டார் போட்டு தண்ணியை மொட்டைமாடிக்கு ஏத்தறேன்.. இதுக்கெல்லாம், மாதாந்திரப் பராமரிப்பு செலவுக்குனு அந்தப் பணத்தைக் கூடுதலா வாங்கறேன்னு சொல்லிடலாமே..” என்றான், மோகன்.
“எனக்குத் தோணவேயில்ல, பாரு..” என்று அருண் ஆச்சரியப்பட்டான்.
“ஆறு மாசம்லாம் முடியாது, ஒரு மாசம்தான் நோட்டீஸ் தரமுடியும்னு கண்டிப்பா சொல்லிடு..”
“அவ காலி பண்ண மாட்டேன்னு பிடிவாதம் பிடிச்சா..?” என்று பூர்ணிமா கேட்டாள்.
“அவங்க வீட்டுக்குப் போற தண்ணி வால்வை மூடி வை.... அப்பப்ப அவ வீட்டுக்குப் போற மின்சாரத்தை ஆப் பண்ணிடு.. தொல்லை பொறுக்க முடியாம அவளே காலி பண்ணிடுவா..”
அருணும், பூர்ணிமாவும் ஒருவரை ஒருவர் புன்னகையுடன் பார்த்துக்கொண்டனர்.
* * *
மோகன் வீட்டிலிருந்து திரும்பியபிறகு, தாயம்மா கலந்துகொடுத்த காபியை உறிஞ்சிக்கொண்டே, கல்பனாவும், பூர்ணிமாவும் கூடிப் பேசினார்கள்.
முத்ரா போன்ற பெண்ணின் சொல்லைக் கேட்டுக்கொண்டு தங்கள் கணவர்கள் மீது சந்தேகம் கொள்வது தவறு என்று முடிவுக்கு வந்தார்கள். முத்ராவிடமிருந்து விலகியே இருப்பது என்று தீர்மானித்தார்கள்.
அவர்கள் பேசிக்கொண்டிருந்த நேரத்தில், வாசலில் வாடகைக் கார் வந்துநிற்கும் ஒலி கேட்டு, பூர்ணிமா வெளியில் வந்தாள்.
முத்ராவும், ஓர் இளைஞனும் இறங்கினார்கள்.
குத்தி நிற்கும் வண்ணமடித்த தலைமுடியும், குறுந்தாடியும், கழுத்தை இறுக்கும் கறுப்புச் சங்கிலியும், கையில்லாத டீ ஷர்ட்டுமாக இறங்கிய அவன் முத்ராவின் இடுப்பை ஒரு கையால் வளைத்துப் பிடித்துக்கொண்டான். இன்னொரு கையில் புகையும் சிகரெட். அவனைப் பார்த்தாலேயே பூர்ணிமாவுக்குப் பிடிக்கவில்லை.
“ஹலோ.. எங்க வீட்டுல சிகரெட் பிடிக்க அனுமதியில்ல..!” என்று பூர்ணிமா இரைந்து சொன்னதும், அவன் புகையை ஆழமாக இழுத்தான்.
“சாரி..!” என்று சொல்லிவிட்டு, பிடித்துக்கொண்டிருந்த சிகரெட்டை அங்கேயே புல்தரையில் போட்டு புல்லையும் சேர்த்து நசுக்கினான்.
“ஹாய், பூர்ணிமா.. மீட் மை ப்ரெண்ட் அமர்..”
பூர்ணிமா பதில் சொல்லாமல் முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.
அவர்கள் இருவரும் சிரித்துக்கொண்டே படிகளில் ஏற, முத்ரா சட்டென்று திரும்பி வந்தாள்.
“பூர்ணா, ஒரு சின்ன உதவி..”
“என்ன..?”
“அமருக்கு பஜ்ஜி, போண்டான்னா ரொம்ப இஷ்டம்.. தண்ணியடிக்கும்போது ஆசையா கேப்பான்.. தாயம்மாகிட்ட சொல்லி ரெடிபண்ணச் சொல்றியா..?”
“திமிரா..? தாயம்மா உங்க வீட்டு சமையல்காரியா..? இதப்பாரு.. தண்ணியடிக்கறதெல்லாம் எங்க வீட்ல அனுமதிக்க முடியாது..” என்று பூர்ணிமா கொதிப்புடன் சொன்னாள்.
“உங்க வீட்டுக்கு யாரு வந்தாங்க..? எங்க வீட்டுல நான் என்ன வேணா செய்வேன்.. தட்டிக் கேக்க முடியாது..” என்று சிரித்தபடியே சொல்லிவிட்டு, முத்ரா மாடியேறிப் போனாள்.
பூர்ணிமாவுக்கு வியர்த்துவிட்டது. உடனடியாக அருணுக்கு போன் செய்தாள்.
“அருண், உடனே வீட்டுக்கு வா..!”
அருண் பதறிக்கொண்டு வீடு திரும்பினான். பூர்ணிமா கொதிப்புடன் அமர்ந்திருப்பதைப் பார்த்ததும், “என்ன ஆச்சு..?” என்று கேட்டான்.
முத்ரா சொன்னதைச் சொன்னாள். புது பிரச்சி னையா என்று அருண் முகம் சூம்பிப்போனது.
மாடியிலிருந்து இரைச்சலாக இசை வந்தது.
“முதல்ல அந்தப் பையனை வெளிய அனுப்பு.. போ..! மாடியில நடக்கற கூத்து எனக்குப் பிடிக்கல.. இது, குடும்பங்கள் இருக்கற இடம்..!” என்று பூர்ணிமா கொதித்தாள்.
அருண் ஆத்திரத்துடன் மாடியேறி முத்ரா வீட்டின் அழைப்புமணியை அழுத்தினான்.
கதவு சற்றே திறந்து, முத்ரா எட்டிப் பார்த்தாள். தோள் மீது ஒரு துண்டைப் போர்த்தியிருந்தாள்.
“ஹாய் அருண், நீங்களும் உள்ள வரீங்களா..?”
முத்ராவிடமிருந்து மெலிதாக மதுவின் நெடி அடித்தது.
“ச்சீ.. யாரோ ஒருத்தனை நீங்க கூட்டிட்டு வந்திருக்கறதா சொன்னாங்க. ப்ளீஸ், அவனை வெளிய அனுப்புங்க, முத்ரா..”
“இது என்னங்க வம்பா போச்சு..? உங்க வீட்டுக்கு யார் விருந்தாளியா வரலாம், யார் வரக்கூடாதுன்னு சொல்ற உரிமை எனக்கு இருக்கா..? அதே போல, என் வீட்டுக்கு யார் வேணா விருந்தாளிங்க வருவாங்க.. அதைக் கேக்க உங்களுக்கு உரிமை இல்ல..”
“ஏய் முத்ரா, கம் இன்..” என்று உள்ளேயிருந்து குரல் கேட்டது.
முத்ரா அருணின் முகத்திலேயே கதவைச் சாத்தினாள். அவன் தலையைத் தொங்கப் போட்டபடி படிகளில் இறங்கினான்.
“தோல்வியோட திரும்பாத.. மோகன் சொன்னதைச் செய்.. போய் மாடில அவங்க வீட்டுக்குப் போற தண்ணி குழாய்ல வால்வை மூடிடு..” என்று பூர்ணிமா துரத்தினாள்.
அது என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்று புரியாமலேயே அருண் மொட்டைமாடிக்கு விரைந்தான்.
- தொடரும்
Related Tags :
Next Story