வானொலி தந்த வாழ்க்கை


வானொலி தந்த வாழ்க்கை
x
தினத்தந்தி 17 Jun 2018 2:46 PM IST (Updated: 17 Jun 2018 2:46 PM IST)
t-max-icont-min-icon

14 வயதில் 10-ம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு குடும்பத்தின் நிர்பந்தத்தால் திருமண வாழ்க்கையில் நுழைந்தவர், சகுந்தலா காலே.

14 வயதில் 10-ம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு குடும்பத்தின் நிர்பந்தத்தால் திருமண வாழ்க்கையில் நுழைந்தவர், சகுந்தலா காலே. இரு குழந்தைகளுக்கு தாயான பிறகு படிப்பை தொடர்ந்தவர் இன்று மகாராஷ்டிரா மாநிலத்தின் உயர் கல்வி துறையின் தலைவராக உயர்ந்திருக்கிறார். கல்வி மீதான ஈடுபாட்டால் கடந்த ஆண்டு வரை படிப்பை தொடர்ந்து பி.எச்டி. முடித்துள்ளார். இவருடைய வாழ்கை பெண் கல்வியின் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கும் விதமாக அமைந்திருக்கிறது. அதனை தனது செயலிலும் வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார்.

சகுந்தலாவின் பூர்வீகம் புனே மாவட்டத்தில் உள்ள அம்பேகான் கிராமம். இவர் நான்காம் வகுப்பு படித்து கொண்டிருந்தபோது தந்தை இறந்திருக்கிறார். அவருடைய தாயார் கூலி வேலை செய்து கஷ்டப்பட்டு படிக்க வைத்திருக்கிறார். அந்த சமயத்தில் பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாத நிலை இருந்ததால் 10-ம் வகுப்பை படித்து முடித்ததும் சகுந்தலாவுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டார்கள். எனினும் கணவர் குடும்பத்தினர் சகுந்தலாவின் படிப்புக்கு துணை நின்று அவரை இந்த நிலைக்கு கொண்டு வந்திருக்கிறார்கள்.

‘‘நான் பத்தாம் வகுப்பை படித்து முடித்ததும் தொடர்ந்து படிக்க ஆசைப்பட்டேன். ஆனால் எங்கள் ஊரில் உயர்கல்வி பயில்வதற்கான கல்வி நிறுவனங்கள் இல்லை. நெடுந்தூரம் நடந்து சென்று படிக்க வேண்டியிருந்தது. என்னை 10-ம் வகுப்பு படிக்க வைப்பதற்கே என் தாயார் மிகவும் சிரமப்பட்டு போனார். வேறு வழி இல்லாமல் போனதால் 14 வயதில் திருமணம் செய்து கொண்டேன். என் கணவருடன் கூட்டு குடும்பத்தில் வசித்தேன். அந்த கால கட்டத்தில்பிற்போக்குத்தனமான சிந்தனை மேலோங்கி இருந்தது. பெண் குழந்தைகள் வெளியே சென்று படிப்பதையோ, வேலை பார்ப்பதையோ யாரும் விரும்பவில்லை. ஆனால் என் கணவரும், மாமியாரும் எனக்கு உறுதுணையாக இருந்தார்கள்.

நான் தொடர்ந்து படிப்பதற்கு ஊக்கம் கொடுத்தார்கள். புனே பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வியில் சேர்ந்து இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பை முடித்தேன். அதன் பிறகு ஆசிரியர் பயிற்சி கல்வியை படித்தேன். பின்னர் நான் படித்த பள்ளியிலேயே ஆசிரியையாக வேலையில் சேர்ந்தேன். இருந்தபோதிலும் மேலும் என் திறமையை மெருகேற்றிக்கொள்ள முடிவு செய்தேன். மாகாராஷ்டிர மாநில பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வில் வெற்றி பெற்று அரசு வேலையில் சேருவது என் லட்சிய கனவானது’’ என்கிறார், சகுந்தலா்.

இவர் போட்டித்தேர்வுக்கு தன்னை தயார்படுத்திக்கொள்ள கடுமையாக உழைத்திருக்கிறார். அந்த சமயத்தில் போட்டித்தேர்வுக்கான புத்தகங்கள் இல்லாமலேயே படித்து வெற்றி பெற்றிருக்கிறார்.

‘‘எங்கள் ஊரில் ஒரே ஒருவர் வீட்டில் தான் டி.வி. இருந்தது. போட்டித்தேர்வுக்கான புத்தகங்கள் எதுவும் எனக்கு கிடைக்கவில்லை. வழி காட்டுவதற்கும் யாரும் இல்லை. பள்ளியில் இருந்து வீடு திரும்பியதும் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு குழந்தைகளை தூங்க வைப்பேன். அதன் பிறகு படிக்க தொடங்குவேன். புத்தகங்கள் எதுவும் கிடையாது என்பதால் பொது அறிவை வளர்த்துக்கொள்வதற்கு வானொலியை நாடினேன்.

எந்த வேலை செய்தாலும் வானொலி செய்திகளை தவறாமல் கேட்பேன். ஒருவேளை நானே கவனிக்காமல் இருந்தாலும் வானொலியில் செய்தி வாசிக்க தொடங்கியதும் என் மகன்கள் ஓடி வந்து தகவல் சொல்வார்கள்’’ என்றவர் 1993-ம் ஆண்டு போட்டி தேர்வில் வெற்றிப்பெற்று கல்வி துறையில் பணி வாய்ப்பை பெற்றிருக்கிறார். அதன் பிறகு உயர் அதிகாரி அந்தஸ்துக்கான தேர்வை எழுதி அதிலும் தேர்ச்சி பெற்றிருக்கிறார். 1995-ம் ஆண்டு பெண் கல்வி மற்றும் விரிவாக்கத்துறை தலைவர் பொறுப்பை ஏற்றிருக்கிறார். படிப்பை கைவிடாமல் கிராமப்புற பெண்களின் வாழ்வியல் பற்றி ஆய்வு செய்து பி.எச்டி.யை நிறைவு செய்திருக்கிறார். பல்வேறு துறைகளில் பணி புரிந்தவர் கடந்த ஆண்டு முதல் மாநில கல்வித்துறை தலைவராக பணியை தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

Next Story