18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு எப்படி வந்தாலும் அ.தி.மு.க. ஆட்சிக்கு ஆபத்தில்லை ஆர்.குமரகுரு எம்.எல்.ஏ. பேட்டி


18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு எப்படி வந்தாலும் அ.தி.மு.க. ஆட்சிக்கு ஆபத்தில்லை ஆர்.குமரகுரு எம்.எல்.ஏ. பேட்டி
x
தினத்தந்தி 18 Jun 2018 4:15 AM IST (Updated: 17 Jun 2018 11:19 PM IST)
t-max-icont-min-icon

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு எப்படி வந்தாலும் அ.தி.மு.க. ஆட்சிக்கு ஆபத்தில்லை என்று ஆர்.குமரகுரு எம்.எல்.ஏ. கூறினார்.

திருக்கோவிலூர்,

விழுப்புரம் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், உளுந்தூர்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஆர்.குமரகுரு திருக்கோவிலூரில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் 2 விதமாக மாறுபட்ட தீர்ப்புகள் கூறியிருந்தாலும், தற்போது 3–வது நீதிபதி விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த தீர்ப்பும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் கருத்தை ஒத்தே வரும் என்பதில் எங்களுக்கு எந்தவித மாற்று கருத்தும் இல்லை.

அந்த வகையில் இந்த வழக்கின் தீர்ப்பு சபாநாயகரின் தீர்ப்பை உறுதிப்படுத்தும் வகையில் தான் வரப்போகிறது. இந்த தீர்ப்பை எதிர்பார்த்து காத்திருந்த பலர் ஏதோ இந்த தீர்ப்பால் ஆட்சி கவிழ்ந்துவிடுவதுபோல் பிதற்றி வருகின்றனர். தீர்ப்பு எப்படி வந்தாலும் அ.தி.மு.க. ஆட்சிக்கு ஆபத்தில்லை என்பதை முதலில் புரிந்துகொள்ளவேண்டும். தமிழக மக்களுக்கு மீண்டும் ஒரு தேர்தலை சந்திக்க விருப்பமில்லை. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு அதன் ஆட்சி காலத்தை முழுவதும் பூர்த்தி செய்யும்.

இன்னும் சொல்லப்போனால் 2021–ம் ஆண்டு நடைபெற போகும் சட்டமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க. அரசு அமையும். அப்போதும் முதல்–அமைச்சராக எடப்பாடி பழனிசாமி இருப்பார் என்பதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். தமிழகத்தின் வளர்ச்சிக்கும், மக்களின் முன்னேற்றத்திற்கும் மறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா வழியில் இந்த அரசு சிறப்பாக செயல்பட்டு வருகின்றது.

இவ்வாறு ஆர்.குமரகுரு எம்.எல்.ஏ கூறினார்.


Next Story