கடலூர் புனித வளனார் பள்ளியின் 150–வது ஆண்டு விழாவில் சாதனையாளர்களுக்கு விருது கவிஞர் வைரமுத்து வழங்கினார்
கடலூர் புனித வளனார் மேல்நிலைப்பள்ளியின் 150–வது ஆண்டு விழாவில் சாதனையாளர்களுக்கு விருதுகளை கவிஞர் வைரமுத்து வழங்கினார்.
கடலூர்,
கடலூர் மஞ்சக்குப்பம் புனித வளனார் மேல்நிலைப்பள்ளியின் 150–வது ஆண்டு விழா மற்றும் பள்ளியின் முன்னாள் முதல்வர் அருட்தந்தை எம்.பீட்டர் அடிகளாரின் 95–வது பிறந்தநாள் விழா, சாதனை படைத்த முன்னாள் மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா புனித வளனார் கல்லூரி கலையரங்கில் நேற்று நடந்தது.
விழாக்குழு தலைவர் ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். புனித வளனார் கல்லூரி செயலாளர் அருட்தந்தை பீட்டர் ராஜேந்திரம் அடிகள், புனித வளனார் பள்ளி முதல்வர்கள் அருள்நாதன் அடிகள், ஆக்னல் அடிகள் மற்றும் சி.கே.அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் அருட்தந்தை எம்.பீட்டர் அடிகளார் தனது 95–வது பிறந்தநாளையொட்டி ‘கேக்’ வெட்டி வழங்கினார். தொடர்ந்து பல்வேறு துறைகளில் சாதனை படைத்த முன்னாள் மாணவர்களுக்கு விருதுகளை, சிறப்பு விருதினரான கவிஞர் வைரமுத்து வழங்கி பேசினார். அவர் பேசியதாவது:–
150 ஆண்டுகளுக்கு முன்பு புனித வளனார் பள்ளி தொடங்கப்பட்டது. மாணவர்களை நல்ல குடிமக்களாக உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இப்பள்ளியை அருட்தந்தையர்கள் தொடங்கி உள்ளனர். கல்வியின் அடிப்படையே பண்பாடு தான். இப்பள்ளி வளாகத்தில் பண்பாட்டு செழுமை இருப்பதை உணர்கிறேன். மதமும், அதிகாரமும் மனிதர்களை மாற்றாது, அன்பும், கல்வியுமே மனிதர்களை மாற்றும். மாணவர்களை நல்ல குடிமகன்களாக்கும் வேலையை தலைமுறை தலைமுறையாக செய்து வருகிறீர்கள்.
1986–ம் ஆண்டு எனக்கு தேசிய விருது கிடைத்த போது, முதலில் கலைஞரை சந்தித்து ஆசி பெற்றேன். அடுத்ததாக எனது தமிழ் ஆசிரியரை பார்த்து வாழ்த்து பெற ஆசைப்பட்டேன். அவர் திண்டுக்கல் அருகே காசிப்பாளையம் என்ற குக்கிராமத்தில் உள்ள பள்ளியில் பணியாற்றுவதை அறிந்தேன். அங்கே சென்று அவரை சந்தித்தேன். எனக்கு அவர் சால்வை போட்டு வாழ்த்தினார். நான் தேசிய விருது பெற்றதற்கு என்னை தொட்டு தமிழ் சொல்லிக்கொடுத்த நீங்களும் ஒரு காரணம் என்று அவரிடம் சொன்னேன். அவர் கண்ணீர் விட்டு அழுதார். ஆசிரியர்களை மதிக்கிற சமுதாயமே நாகரீக சமுதாயம்.
தமிழக மாணவர்கள் உலக அளவில் போட்டிப்போட வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறார்கள். எனவே மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை ஊட்ட வேண்டும். ஆசிரியர்கள், பாடத்தை மட்டும் கற்றுக்கொடுத்தால் எந்திரம். பாடத்திட்டத்துக்கு வெளியே வாழ்க்கை திட்டத்தையும் கற்றுக்கொடுப்பவரே மாணவர்களின் நெஞ்சில் நிலைத்திருப்பார்கள். சினிமா ஹீரோக்களை விட ஆசிரியர்கள் தான் எங்கள் ஹீரோ என்று மாணவர்கள் என்றைக்கு நினைக்கிறார்களோ அன்றைக்குத்தான் இந்தியா வல்லரசாகும்.
கலைஞர் பிறந்த நாளுக்கு அவரை வாழ்த்தினேன். அப்போது நீங்கள் விரும்புகிற காலம் வரை வாழ வேண்டும் என்று அந்த தமிழ் தந்தைக்கு சொன்னேன். அதேப்போல் இன்றைக்கு இந்த அருட்தந்தைக்கும் சொல்கிறேன், நீங்கள் விரும்பும் வரை வாழுங்கள்.
இவ்வாறு கவிஞர் வைரமுத்து பேசினார்.
நிறைவாக அருட்தந்தை எம்.பீட்டர் அடிகளார் ஆசியுரை வழங்கினார்.
விழாவில் முன்னாள் மாணவர்களான வேளாங்கண்ணி பேராலய அருட்தந்தை பிரபாகர், முன்னாள் எம்.பி. பி.ஆர்.எஸ்.வெங்கடேசன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் இள.புகழேந்தி, புதுச்சேரி சிவகுமார், மருத்துவர்கள் சென்னை ஆர்.ஜெயச்சந்திரன், கடலூர் எஸ்.பாண்டியன், புதுச்சேரி ஜி.இளங்கோவன், பெருமாள் ஏரி விவசாயிகள் சங்க செயலாளர் தனூர் ஆர்.சண்முகம், தொழில் அதிபர்கள் கே.கே.கமலகண்ணன், சி.கே.குமாரவேல் மற்றும் சி.எஸ்.ஐ.ஆர். நிறுவன இயக்குனர் பி.சந்திரசேகரன் ஆகியோருக்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
விழாவில் சி.கே.கல்வி குழும இயக்குனர் சந்திரசேகரன், ஏ.கே.டி. கல்வி குழுமங்களின் தலைவர் மகேந்திரன், ஸ்ரீவெங்கடேசுவரா மருத்துவ கல்லூரி நிர்வாகி ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் முன்னாள் மாணவர் சுரேஷ் நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கால் கிரியேட்டர் சந்துரு செய்திருந்தார்.