கம்பம் பள்ளத்தாக்கு பகுதி பாசனத்துக்காக முல்லைப்பெரியாறு அணையில் தண்ணீர் திறப்பு
முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கம்பம் பள்ளத்தாக்கு பகுதி பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது.
தேனி,
தேனி மாவட்டத்தில் லோயர்கேம்ப் முதல் பழனிசெட்டிபட்டி வரையிலான 14 ஆயிரத்து 707 ஏக்கர் பாசனப்பகுதி கம்பம் பள்ளத்தாக்கு என அழைக்கப்படுகிறது. இரு போக பாசனம் நடைபெறும் இந்த பகுதிக்கு முல்லைப்பெரியாறு அணை நீர் ஆதாரமாக திகழ்கிறது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையால் முல்லைப்பெரியாறு அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது.
இதனால் முதல் போக பாசனத்துக்கு முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்பேரில் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கம்பம் பள்ளத்தாக்கு பகுதி பாசனத்திற்காக நேற்று காலை தண்ணீர் திறந்து விடப்பட்டது. துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணையில் திறந்து தண்ணீரை திறந்து வைத்து வெளியேறிய நீரில் மலர் தூவினார்.
கம்பம் பள்ளத்தாக்கு பகுதி பாசனத்திற்காக வினாடிக்கு 200 கன அடியும், தேனி மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 100 கன அடி தண்ணீரும் என வினாடிக்கு 300 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.