தனுஷ்கோடி அரிச்சல்முனையில் கரை ஒதுங்கிய பைபர் படகு கடலோர போலீசார் கைப்பற்றி விசாரணை
தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் கரை ஒதுங்கிய பைபர் படகினை கடலோர போலீசார் கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராமேசுவரம்,
ராமேசுவரம் அருகே தனுஷ்கோடி அரிச்சல்முனை தென்கடல் பகுதியில் பைபர் படகு ஒன்று மிதப்பதாக கடலோர போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து போலீசார் அங்கு சென்று பார்த்தபோது சுமார் 35 அடி நீளமும், 6 அடி அகலமும் கொண்ட பைபர் படகு ஒன்று கடலில் மிதந்து கொண்டிருந்தது.
பின்னர் அந்த படகை கடற்கரைக்கு கொண்டு வந்து சோதனையிட்டபோது அதிக குதிரைத்திறன்கொண்ட 2 என்ஜின்களும், 2 கேன்களில் மண்எண்ணெய், டீசல் ஆகியவையும் இருப்பது தெரியவந்தது. மேலும் அந்த படகின் முகப்பு பகுதியில் புனித அந்தோணியார் உருவம் பொரிக்கப்பட்டு இருந்ததுடன் செயின்ட் அல்போன்சா போட் சென்டர், கூட்டுமங்கலம் என்றும் எழுதப்பட்டு இருந்தது. இந்த படகை போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து கடலோர போலீசார் கூறும்போது, பைபர் படகு மூலம் மீன்பிடிப்பது கன்னியாகுமரி பகுதியில் தான் அதிகம் உள்ளது. கூட்டுமங்கலம் என்ற ஊர் குளச்சல் பகுதியில் உள்ளது. எனவே இந்த படகு கடல் அலையின் வேகத்தில் இந்த பகுதிக்கு வந்ததா? அல்லது மீன்பிடிக்க சென்றபோது அலையில் சிக்கி ஏதேனும் நிகழ்ந்திருக்குமா? அல்லது கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதா? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறோம்.
மேலும் இதுகுறித்து கன்னியாகுமரி மீன்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று கூறினர்.