பிரான்மலை பகுதியில் கடும் வறட்சியால் வறண்டுபோன கிணறுகள் கேள்விக்குறியான விவசாயம்
சிங்கம்புணரியை அடுத்த பிரான்மலை பகுதியில் கடும் வறட்சி காரணமாக பெரும்பாலான கிணறுகள் வறண்டுவிட்டன. இதனால் விவசாயம் செய்யமுடியாமல் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
சிங்கம்புணரி,
சிங்கம்புணரி அருகே 10 கி.மீ. தொலைவில் உள்ளது பிரான்மலை. இயற்கை சூழலோடு, அழகிய மலைப்பகுதிகள் நிறைந்து காணப்படும் இங்கு பிரசித்திபெற்ற கொடுங்குன்றநாதர் கோவில் மற்றும் பள்ளிவாசல் ஒன்றும் உள்ளது. இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் பெரும்பாலும் விவசாயத்தை மட்டுமே பிரதான தொழிலாக நம்பி வாழ்ந்து வருகின்றனர். இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே இப்பகுதியில் மழை சரிவர பெய்யாததால் விவசாயம் கேள்விக்குறியாகி வருகிறது. இதனைத்தொடர்ந்து சொந்தமாக கிணறு வைத்திருப்பவர்கள் மட்டும் விவசாயம் செய்து வந்தனர். இந்த கிணற்றில் ஊரும் ஊற்றை நம்பி தங்களது நிலப்பரப்பில் விவசாயம் செய்து வந்த விவசாயிகளுக்கு கடந்த ஆண்டு மீண்டும் மழை ஏமாற்றியதால் சாகுபடி பரப்பு குறைந்து போனது.
இதற்கிடையில் போதிய மழையில்லாமல் வறட்சி நிலவியதால் தற்போது இப்பகுதியில் உள்ள பெரும்பாலான கிணறுகளில் குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லாமல் வறண்டுவிட்டன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த சிறுமழையினால் சிறிதளவு தண்ணீர் ஊறியது. இதை நம்பி சில விவசாயிகள் தங்களது கிணற்று பாசன நிலப்பரப்பில் மல்லிகை பூ, செவ்வந்தி பூ, துளசி செடி, பப்பாளி, நிலக்கடலை உள்ளிட்டவற்றை சாகுபடி செய்திருந்தனர். ஆனால் கடந்த மாதம் இப்பகுதியில் போதிய மழையில்லாததால் கிணறுகளில் ஏற்கனவே இருந்த தண்ணீரும் வற்றி, தற்போது பாழ்கிணறு போன்று காட்சியளிக்கிறது.
கிணறுகள் வறண்டுபோனதால், அதில் இருந்த தண்ணீரை நம்பி பயிரிடப்பட்ட பயிர்கள் கருகின. பயிர்களை காப்பாற்ற முடியாமல் விவசாயிகள், வருண பகவானை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். விவசாயி ஆறுமுகம் என்பவர் கூறும்போது, கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையினால் கிணறுகளில் ஓரளவு தண்ணீர் பெருகியது. இதை பயன்படுத்தி நெல் மற்றும் நிலக்கடலை, வெள்ளரி உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்தேன். ஆனால் மழை தொடர்ந்து ஏமாற்றியதால் கிணறு வறண்டுபோய் பயிர்கள் கருகும் நிலையில் உள்ளது. தென்மேற்கு பருவமழை ஓரளவு கைக்கொடுத்தால் மட்டுமே பயிர்களை காப்பாற்ற முடியும். உழவன் கணக்கு பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது என்று சொல்வார்கள். அதேபோல் நிலைமை தான் தற்போது ஏற்பட்டுள்ளது. வருணபகவான் தான் கருணை காட்ட வேண்டும் என்றார்.