கம்பம் பள்ளத்தாக்கு பாசனத்துக்காக முல்லைப்பெரியாறு அணையில் தண்ணீர் திறப்பு ஓ.பன்னீர் செல்வம் மதகை திறந்து வைத்தார்
முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கம்பம் பள்ளத்தாக்கு பகுதி பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதற்காக தமிழக துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அணை மதகை திறந்து வைத்தார்.
கூடலுர்,
தேனி மாவட்டத்தில் லோயர்கேம்ப் முதல் பழனிசெட்டிபட்டி வரையிலான 14 ஆயிரத்து 707 ஏக்கர் பாசனப்பகுதி கம்பம் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படுகிறது. இருபோக பாசனம் நடைபெறும் இந்த பகுதிக்கு முல்லைப்பெரியாறு அணை நீர் ஆதாரமாக திகழ்கிறது. ஆண்டு தோறும் ஜூன் மாதம் 1–ந்தேதி இந்த அணையில் இருந்து கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் முதல் போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம் ஆகும்.
ஆனால் இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவு அணையில் நீர்மட்டம் உயரவில்லை. இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை கடந்த சில தினங்களாக பெய்ய தொடங்கியது. இதையொட்டி முல்லைப்பெரியாறு அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது.
இதற்கிடையே முதல் போக பாசனத்துக்கு முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன் பேரில் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். அவருடைய உத்தரவின் பேரில் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கம்பம் பள்ளத்தாக்கு பகுதி பாசனத்திற்காக நேற்று காலை 11.35 மணிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதில் தமிழக துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொண்டு பூஜை செய்து பொத்தானை அழுத்தி அணை மதகை திறந்து வைத்து மலர் தூவினார்.
அப்போது கம்பம் பள்ளத்தாக்கு பகுதி பாசனத்திற்காக வினாடிக்கு 200 கன அடியும், தேனி மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 100 கன அடி தண்ணீரும் என வினாடிக்கு 300 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ், தேனி பாராளுமன்ற உறுப்பினர் பார்த்திபன், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையன், மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சிவக்குமார், தேனி மாவட்ட முன்னாள் இளைஞர்–இளம் பெண்கள் பாசறை தலைவர் சேரலாதன், மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி, பெரியார் வைகை நீர்ப்பாசன தலைமை பொறியாளர் சுப்பிரமணி, பெரியார் நீர்ப்பாசன உதவி செயற்பொறியாளர் சாம்இர்வின் மற்றும் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி விவசாயிகள், அ.தி.மு.க. பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக தேக்கடியில் உள்ள வனதுர்க்கை கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதே போல மதகு பகுதியில் தண்ணீர் திறந்து விடும் முன்பு சிறப்பு தொழுகையும் நடத்தப்பட்டது. முதல் போக பாசனத்திற்காக திறக்கப்பட்டு உள்ள தண்ணீர் மூலம் உத்தமபாளையம் தாலுகாவில் 11 ஆயிரத்து 807 ஏக்கர் நிலம், தேனி தாலுகாவில் 2 ஆயிரத்து 412 ஏக்கர் நிலம், போடி தாலுகாவில் 488 ஏக்கர் நிலம் வீதம் மொத்தம் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.
விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி குறுகிய கால நெற்பயிர்களை சாகுபடி செய்து பயன் அடைய வேண்டும். மழை பெய்யாமல் தண்ணீர் இருப்பு குறைந்து விட்டால், முறைவைத்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும். எனவே விவசாயிகள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். 152 அடி உயரமுள்ள முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் நேற்று 127.20 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து 1,467 கன அடியாகும். அணையில் 4,093 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று முன் தினம் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:–முல்லைப்பெரியாறு 30.4, தேக்கடி 2.6, சோத்துப்பாறை 1, வைகை அணை 2.4.