துணை கலெக்டர்கள் பணிமூப்பு விவகாரம்: 10 நாட்களுக்குள் பதிலளிக்க தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் உத்தரவு
துணை கலெக்டர்கள் பணிமூப்பு விவகாரத்தில் 10 நாட்களுக்குள் பதிலளிக்க தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
மதுரை மாவட்ட விழிப்புணர்வு கண்காணிப்புக்குழு உறுப்பினர் பாண்டியராஜா, தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்திற்கு அனுப்பிய கோரிக்கை மனுவில் "தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த 2013–ம் ஆண்டு நடத்திய போட்டி தேர்வுகளின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 56 துணை கலெக்டர்களில், பின்னடைவு காலி பணியிடங்களில் தேர்வான ஆதிதிராவிடர்கள், பழங்குடியின வகுப்பை சேர்ந்த 23 துணை கலெக்டர்களுக்கு பணி மூப்பு உள்ளது என அரசு ஆணைகள் தெளிவாக கூறியுள்ளன. அந்த அரசாணைகள் செயல்படுத்தப்படாமல் இருக்கிறது. எனவே தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் தலையிட்டு ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியின வகுப்பை சேர்ந்த 23 துணை கலெக்டர்களுக்கு பணி மூப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த மனு குறித்து நீண்டநாட்களாக நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது. இதனை தொடர்ந்து ஆதிதிராவிடர் ஆணைய துணை தலைவர் முருகன், இதுசம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஆணையத்திற்கு வலியுறுத்தினார்.
அதன்பேரில், மனு குறித்து இதுவரை எடுத்த நடவடிக்கை பற்றி 10 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை முதன்மை செயலாளர் மற்றும் டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் ஆகியோருக்கு தேசிய ஆதி திராவிடர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.