கம்பம், தேனி மலைப்பகுதிகளில் நக்சலைட்டுகளுக்கு தளம் அமைத்து பயிற்சி அளிக்கப்படுகிறது, காடேஸ்வரா சுப்பிரமணியம் குற்றச்சாட்டு


கம்பம், தேனி மலைப்பகுதிகளில் நக்சலைட்டுகளுக்கு தளம் அமைத்து பயிற்சி அளிக்கப்படுகிறது, காடேஸ்வரா சுப்பிரமணியம் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 18 Jun 2018 3:30 AM IST (Updated: 18 Jun 2018 1:29 AM IST)
t-max-icont-min-icon

கம்பம், தேனி மலைப்பகுதியில் நக்சலைட்டுகளுக்கு தளம் அமைத்து பயிற்சி அளிக்கப்படுவதாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் குற்றம்சாட்டி உள்ளார்.

ஈரோடு,

சத்ரபதி சிவாஜி இந்து சக்ரவர்த்தியாக கடந்த 1674–ம் ஆண்டு முடி சூட்டிக்கொண்டார். இதை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் இந்து சாம்ராஜ்ய தின விழா மற்றும் காவிக்கொடி ஏற்று விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று ஈரோட்டில் அக்ரஹாரம், லட்சுமி நகர், கிருஷ்ணம்பாளையம், பெரியவலசு நால்ரோடு, சூரம்பட்டி நால்ரோடு உள்பட பல்வேறு பகுதிகளில் இந்து சாம்ராஜ்ய விழா கொண்டாடப்பட்டு, காவிக்கொடி ஏற்றப்பட்டது. இதற்காக இந்து முன்னணியினர் வாகனங்களில் ஊர்வலமாக சென்றனர்.

இந்த விழாவுக்கு மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை தாங்கி காவிக்கொடி ஏற்றி வைத்தார். மாநில செயலாளர் கிஷோர்குமார், துணைத்தலைவர் பூசப்பன், மாவட்ட தலைவர் ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். இதில் மாவட்ட பொதுச்செயலாளர் சக்திமுருகேஷ், வீரப்பன்சத்திரம் பகுதி தலைவர் லோகநாதன், செயலாளர் கவீன் மற்றும் மாநகர், மாவட்ட, நகர், ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:–

கோவை கோட்டத்துக்கு உட்பட்ட திருப்பூர், நீலகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இன்று (நேற்று) ஒரே நாளில் 3 ஆயிரம் இடங்களில் காவிக்கொடி ஏற்றப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் சமீப காலமாக கலவரத்தை உருவாக்குவதற்காக பெரிய முயற்சிகள் நடந்து கொண்டு இருக்கிறது. அதனுடைய ஒருபகுதி தான் தூத்துக்குடி கலவரம்.

மேலும் நக்சலைட், பயங்கரவாதிகள், பிரிவினைவாதிகளும் இதில் ஈடுபட்டு உள்ளனர். தமிழகத்தில் இன்னும் பெரிய கலவரத்தை நடத்தவும் அவர்கள் திட்டமிட்டு இருக்கிறார்கள். குறிப்பாக கம்பம், தேனி போன்ற மலைப்பகுதியில் நக்சலைட்டுக்கு தளம் அமைத்து பயிற்சி அளிப்பதாக தெரிகிறது.

வருகிற டிசம்பர் மாதம் 23, 24, 25 ஆகிய தேதிகளில் 1,008 கோமாதா பூஜை திருப்பூர் மாவட்டம் கொங்களுரில் நடைபெற உள்ளது.

இதில் ஒரு லட்சம் தம்பதிகளை வைத்து பெரிய யாகம் நடத்துகிறோம். இந்த யாகத்தில் பொதுமக்கள் சுமார் 5 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம். அதற்காக அங்கு 100 ஏக்கர் பரப்பளவில் பணிகள் நடைபெற்று வருகிறது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் எங்களுடைய கோரிக்கைகளை ஏற்கும் கட்சிகளுக்கு நாங்கள் ஆதரவு தெரிவிப்போம்.

இவ்வாறு மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறினார்.


Next Story