கலந்தாய்வுக்கு மணக்கோலத்தில் வந்த ஆசிரியர் தம்பதி


கலந்தாய்வுக்கு மணக்கோலத்தில் வந்த ஆசிரியர் தம்பதி
x
தினத்தந்தி 18 Jun 2018 4:17 AM IST (Updated: 18 Jun 2018 4:17 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் முதன்மை கல்வி அலுவலகத்தில் நடந்த கலந்தாய்வில் ஆசிரியர் தம்பதியினர் மணக்கோலத்தில் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை முதன்மை கல்வி அலுவலக கூட்டரங்கில் 2018-19-ம் கல்வி ஆண்டிற்கான பொது மாறுதல் மற்றும் பதவி உயர்விற்கான கலந்தாய்வு கடந்த 12-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளி முதுகலை மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கான கல்வி மாவட்டத்திற்குள் மாறுதல், கல்வி மாவட்டம் விட்டு கல்வி மாவட்டம் மாறுதல், மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கான கலந்தாய்வு நடைபெற இருந்தது. அந்த கலந்தாய்வு மாற்றப்பட்டு நேற்று நடைபெற்றது.

கலந்தாய்விற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் அன்பழகன், ரேணு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 516 முதுகலை மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இந்த கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடைபெற்றது.

இந்த நிலையில் கடலாடி அரசு பள்ளியை சேர்ந்த முதுகலை ஆசிரியர் பாலகிருஷ்ணனுக்கும், செய்யாறு அருகில் உள்ள அழிவிடைதாங்கி அரசு பள்ளியை சேர்ந்த முதுகலை ஆசிரியை மகேஸ்வரிக்கும் நேற்று காலை திருமணம் நடைபெற்றது. அவர்கள் ஏற்கனவே கலந்தாய்வில் பங்கேற்க மனு செய்திருந்தனர்.

இந்த நிலையில் திருமணம் முடிந்ததும் கலந்தாய்வில் கலந்து கொள்ள அவர்கள் மணக்கோலத்தில் அங்கு வந்தனர். பின்னர் கலந்தாய்வில் கலந்து கொண்டனர். அவர் களை முதன்மை கல்வி அலுவலர் வாழ்த்தினார். 

Next Story