பள்ளி, கோவில்கள் அருகே மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்கக்கூடாது, கலெக்டரிடம் மனு


பள்ளி, கோவில்கள் அருகே மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்கக்கூடாது, கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 19 Jun 2018 4:15 AM IST (Updated: 19 Jun 2018 12:27 AM IST)
t-max-icont-min-icon

கோவை ராமநாதபுரத்தில் பள்ளி, கோவில்கள் அருகே மூடப்பட்ட டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க கூடாது என்று மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

கோவை,

கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கலெக்டர் ஹரிகரனிடம் மனு அளித்தனர். கோவை மாநகர் மாவட்டம் 68–வது வார்டு பா.ஜனதா கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கவிதா ராஜன் தலைமையில் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கலெக்டர் ஹரிகரனிடம் மனு அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப் பதாவது:–

கோவை ராமநாதபுரம் 68–வது வார்டு 80 அடி சாலையில் சின்னப்ப தேவர் கல்யாண மண்டபம் எதிரில் ஏற்கனவே டாஸ்மாக் கடை இருந்தது. அது சில மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டது. ஆனால் தற்போது அந்த கடை புதிதாக திறக்கப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த பகுதியில் ஏராளமான குடியிருப்புகளும். 3 கல்யாண மண்டபங்களும், 100 மீட்டர் தூரத்தில் மாநகராட்சி தொடக்கப்பள்ளி, பழனி ஆண்டவர் கோவில், மாகாளியம்மன் கோவில்கள் உள்ளன.

தற்போது பள்ளிகள் திறந்துள்ள நிலையில் ஏராளமான மாணவ–மாணவிகள் அந்த வழியாக செல்கிறார்கள். சனிக்கிழமை தோறும் அந்த சாலையில் வார சந்தை நடப்பதால் அன்று பொதுமக்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படும். 80 அடி சாலையில் ஏற்கனவே 3 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த நிலையில் மூடப்பட்ட இந்த கடையை திறந்தால் அந்த பகுதி மக்கள் மிகவும் அவதிக்குள்ளாவார்கள். எனவே அந்த கடையை திறக்க கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட நடைபாதை வியாபாரிகள் சங்கம்(ஏ.ஐ.டி.யு.சி.) சார்பில் அளித்துள்ள மனுவில் கூறியிருந்ததாவது:–

கோவை டாக்டர் நஞ்சப்பா சாலையில் ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் 125 பேருக்கு பல்வேறு கடைகள் வைக்க இடம் ஒதுக்கி தரப்பட்டது. இதற்கான வாடகையை மாநகராட்சிக்கு செலுத்தி வந்தோம். 20 ஆண்டுகளாக கடை வைத்திருந்த எங்களை மேம்பாலம் கட்டுவதாக கூறி கடைகளை காலி செய்ய சொன்னார்கள். காலி செய்த இடத்திற்கு பதில் கோவை டாடாபாத் மின்சார வாரிய அலுவலகம் இருக்கும் பகுதியில் மாநகராட்சியால் இடம் ஒதுக்கி தரப்பட்டது. ரூ.1½ லட்சம் வரை செலவு செய்து கடையை அமைத்தோம். ஆனால் மின்வாரிய அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்து அந்த கடைகளை காலி செய்து விட்டனர்.

எனவே சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் நஞ்சப்பா ரோடு பஸ் நிலையம் தமிழ்நாடு ஓட்டல் அருகில், நஞ்சப்பா சாலை சண்டே மார்க்கெட் எதிரில், வ.உ.சி.பூங்கா எதிரே ஆர்.டி.ஓ. ஓட்டுனர் பயிற்சி இடம், சிவானந்தா காலனி மெயின் ரோடு உள்பட 10 இடங்களில் ஏதாவது ஒரு இடத்தை ஒதுக்கி நடைபாதை கடைகளை வைக்க அனுமதிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

கோவை 59–வது வார்டு நேதாஜிபுரம் எஸ்.ஐ.எச்.எஸ். காலனி குடியிருப்போர் பொதுமக்கள் அளித்து உள்ள மனுவில், ‘59–வது வார்டில் பல ஆண்டுகளாக சாக்கடை தண்ணீர் செல்ல வழியில்லாததால் பொதுமக்கள் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார்கள். மேம்பால பணிகளும் இன்னும் முடிக்கப்படாமல் உள்ளது. எனவே சாக்கடை நீர் தடையில்லாமல் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.

கோவை மாவட்ட பொது ஒப்பந்த மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சங்க பொதுச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–

கோவை அரசு ஆஸ்பத்திரியில் இலவச அமரர் ஊர்தி மற்றும் இலவச தாய் சேய் நல ஊர்தி சேவையை இந்திய செஞ்சிலுவை சங்கம் செயல்படுத்தி வருகிறது. அமரர் ஊர்திகளில் டிரைவர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டும். டிரைவர்களின் பணி நேரத்தை வரையறை செய்ய வேண்டும். பணி நீக்கம் செய்யப்பட்ட அனைத்து டிரைவர்களையும் மீண்டும் பணி அமர்த்த வேண்டும். சடலங்களை வைத்து ஓட்டும் டிரைவர்கள் பாதி நேரம் அமரர் ஊர்தியை இயக்கி விட்டு மீதி பாதி நேரம் தாய்–சேய் நல ஊர்தி இயக்குகிறார்கள். இதனால் பிறந்த பச்சிளங்குழந்தைகளுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே தாய்–சேய் நல ஊர்திக்கு என்று வேறு டிரைவர்களை புதிதாக பணியமர்த்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கத்தினர்(சி.ஐ.டி.யு.) அளித்துள்ள மனுவில் கூறப்பட்டிருந்த விவரம் வருமாறு:–

கோவை மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் சுகாதார துப்புரவு பணியாளர்கள், தண்ணீர் தொட்டி ஆபரேட்டர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை அரசாணைப்படி வழங்க வேண்டும். சிறப்பு கால முறை ஊதிய துப்புரவு பணியாளர்களுக்கு 7–வது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஊதிய உயர்வு, பணிக்கொடை ஊதியம் அரசாணை வெளியிட வேண்டும். 3 ஆண்டு பணி முடித்த தினக்கூலி தொகுப்பூதிய துப்புரவு தொழிலாளர்களை நிரந்தரமாக்கி ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.


Next Story