நீலகிரி மாவட்டத்துக்கு 13 புதிய அரசு பஸ்கள் வந்தன விரைவில் இயக்கப்படும் என அதிகாரிகள் தகவல்
நீலகிரிக்கு 13 புதிய அரசு பஸ்கள் வந்து உள்ளன. இந்த பஸ்கள் விரைவில் இயக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் சர்வதேச அளவில் சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்கு ஆண்டுதோறும் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள். ஊட்டியில் இருந்து கோவை, திருப்பூர், பெங்களூரு, கோழிக்கோடு, மைசூர், சேலம் ஆகிய பகுதிகளுக்கு தற்போது சாதாரண பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நீலகிரியில் ஊட்டி–1, ஊட்டி–2, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், மேட்டுப்பாளையம்–2 ஆகிய 6 போக்குவரத்து டெப்போக்கள் உள்ளன. இந்த டெப்போக்களில் புதிய பஸ்கள் வந்துள்ளன. இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:–
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கு புதிய பஸ்கள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த பஸ்களில் 59 இருக்கைகளுக்கு பதிலாக 52 இருக்கைகள் பொருத்தப்பட்டு உள்ளன. அவை தரமாக அமைக்கப்பட்டு உள்ளது. புதிய பஸ்களில் பயணம் செய்யும் பயணிகள் ஏறும் இடம், இறங்கும் இடம் மற்றும் பஸ் நிறுத்தங்கள் போன்றவற்றை தெளிவாக ஆடியோ மூலம் கேட்கலாம். இதன் மூலம் புதிதாக பஸ்சில் பயணம் செய்யும் பயணிகள் எளிதில் இடங்களை தெரிந்துகொண்டு, சம்மந்தப்பட்ட இடங்களில் இறங்க முடியும். மேலும் பஸ்களில் உடைமைகளை வைக்க அடிப்பாகத்தில் தனிப்பெட்டி உள்ளது.பஸ்சின் முன்பகுதி மற்றும் பின்பகுதியில் உள்ள எல்.இ.டி. திரையில் புறப்படும் இடம், சேரும் இடம் மற்றும் நிறுத்தப்படும் நகரங்கள் ஆகிய விவரங்கள் ஓடிக்கொண்டே இருக்கும்.
நீலகிரி மாவட்டத்துக்கு புதியதாக வந்துள்ள 13 பஸ்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. பஸ் நிலையங்களில் நிற்கும் போது, பஸ் எங்கே செல்கிறது என்பது குறித்த ஆடியோ ஒலித்துக்கொண்டே இருக்கும். பஸ்சின் இருபுறங்களிலும் அவசர கால கதவுகள் பொருத்தப்பட்டு உள்ளன.தானியங்கி எந்திரம் மூலம் செயல்படும் கதவுகள் உள்ளன. விரைவில் அந்த பஸ்கள் போக்குவரத்து கழகத்தில் பதிவு செய்யப்படும். ஊட்டி மற்றும் கூடலூர் பகுதியில் இருந்து கோவை, கோழிக்கோடு, மைசூர், பெங்களூரு, திருப்பூர், மதுரை உள்ளிட்ட இடங்களுக்கு புதிய பஸ்கள்இயக்கப்பட உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.