வால்பாறையில் பெண்ணை தாக்கி கொன்ற சிறுத்தைப்புலி, முதுமலை வனப்பகுதியில் விடப்பட்டது
வால்பாறையில் பெண்ணை தாக்கி கொன்ற சிறுத்தைப்புலி முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் நள்ளிரவில் விடப்பட்டது.
மசினகுடி,
கோவை மாவட்டம் வால்பாறை காஞ்சமலை எஸ்டேட்டில் கடந்த 15–ந் தேதி இரவு கைலாசவதி (வயது 47) என்ற பெண்ணை சிறுத்தைப்புலி தாக்கி கொன்றது. இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. எனவே அந்த சிறுத்தைப்புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும், வன விலங்குகளிடம் இருந்து பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று சின்கோனா தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து கைலாசவதியை கொன்ற சிறுத்தைப்புலியை பிடிக்க வனத்துறையினர் 2 கூண்டுகளை வைத்தனர். அதில் கடந்த 16–ந்தேதி இரவு சிறுத்தைப்புலி கூண்டில் சிக்கியது. இதனால் அந்த பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.
கூண்டில் சிக்கிய 5 வயது மதிக்கத்தக்க அந்த ஆண் சிறுத்தைப்புலியை வண்டலூர் வன உயிரியல் பூங்காவிற்கு எடுத்து செல்வதாக வனத்துறையினர் தெரிவித்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அதை நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்திற்கு கொண்டு வந்தனர்.
பின்னர் நள்ளிரவு சுமார் 11.50 மணி அளவில் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பகாடு வனச்சரகத்திற்கு உட்பட்ட கக்கநல்லா பகுதியில் தமிழக–கர்நாடக எல்லை ஓரத்தில் அதனை கூண்டில் இருந்து திறந்து விட்டனர். கூண்டை திறந்து விட்டவுடன் அந்த சிறுத்தைப்புலி கண் இமைக்கும் நேரத்தில் கூண்டிலிருந்து வெளியில் குதித்து புதருக்குள் ஓடி மறைந்தது.
அப்போது முதுமலை புலிகள் காப்பக துணை கள இயக்குனர் செண்பக பிரியா, வெளிமண்டல துணை கள இயக்குனர் புஸ்பாகரன், கோவை மண்டல வனக்கால்நடை மருத்துவ அலுவலர் மனோகரன், வனச்சரகர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் இருந்தனர். இதனிடையே முதுமலை புலிகள் காப்பகத்தை சுற்றி உள்ள கூடலூர் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்களும், மசினகுடி, மாயார் உள்ளிட்ட கிராம மக்களும், இது போன்று மனிதர்களை வேட்டையாடும் சிறுத்தைகளை எடுத்து வந்து இங்கு விடக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவர்கள், இனி வரும் காலங்களில் இது போன்ற நடவடிக்கைகளில் வனத்துறையினர் ஈடுபட்டால், போராட்டங்களை தீவிரப்படுத்துவோம் என்றனர்.