சி.ஐ.டி.யு. உள்ளாட்சித்துறை ஊழியர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம்
சி.ஐ.டி.யு. உள்ளாட்சித்துறை ஊழியர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ராமநாதபுரம்,
மாவட்ட சி.ஐ.டி.யு. உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் ஊராட்சியில் பணியாற்றும் மேல்நிலைத்தொட்டி இயக்குபவர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு 7–வது ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையில் ஊதிய உயர்வு வழங்க வேண்டும், 3 ஆண்டு பணியாற்றிய தொகுப்பூதிய துப்புரவு தொழிலாளர்களை நிரந்தரமாக்க வேண்டும்.
குறைந்தபட்ச ஊதிய அரசாணைப்படி சம்பளம் வழங்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலக வளாகத்தில் கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் அய்யாத்துரை தலைமையில் சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் சிவாஜி, மாவட்ட பொருளாளர் சந்தானம், மாவட்ட நிர்வாகி நாகநாதன், ஒன்றிய நிர்வாகிகள் கமுதி மகாலிங்கம், கடலாடி பிரான்சிஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரும் கலெக்டர் நடராஜன் மற்றும் ஊராட்சிகள் உதவி இயக்குனர் செல்லத்துரை ஆகியோரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
இந்த கோரிக்கைகளை பரீசிலித்த கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள், ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து 10 நாட்களில் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் கூறினர்.