மாநில அரசை கண்டித்து 8 கிராம மக்கள், வியாபாரிகள் சாலை மறியல்–கடையடைப்பு


மாநில அரசை கண்டித்து 8 கிராம மக்கள், வியாபாரிகள் சாலை மறியல்–கடையடைப்பு
x
தினத்தந்தி 19 Jun 2018 3:15 AM IST (Updated: 19 Jun 2018 12:53 AM IST)
t-max-icont-min-icon

மாநில அரசை கண்டித்து, 8 கிராம மக்கள், வியாபாரிகள் சாலை மறியல்–கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இடுக்கி,

இடுக்கி மாவட்டம் தேவிகுளம் தாலுகாவில் உள்ள மூணாறு, பள்ளிவாசல், ஆனைவிரட்டி, வெள்ளத்தூவல், பைசன்வாலி, சின்னக்கானல், சாந்தாம்பாறை, ஆனவிலாசம் ஆகிய கிராமங்களில் வீடு, கட்டிடங்கள் கட்டவும், நட்டு வளர்த்த மரங்களை வெட்டுவதற்கும் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

மேலும் வீடுகள், கடைகளுக்கு அரசு நிலப்பட்டா வழங்க மறுக்கிறது. அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து, இந்த கிராமங்களை சேர்ந்த வியாபாரிகள், பொதுமக்கள் அடிமாலியில் கொச்சி–மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன.

இதையடுத்து போலீசார் வந்து போக்குவரத்துக்கு இடையூறு செய்யாமல் போராட்டம் நடத்துமாறு அறிவுறுத்தினர். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். அதன்பிறகே போக்குவரத்து சீரானது. இதையடுத்து அவர்கள், சாலையோரத்தில் நின்று கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தை வியாபார விவசாயி ஏகோபன சமிதி சங்க தலைவர் திவாகரன் தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான பொதுமக்கள், வியாபாரிகள் கலந்து கொண்டனர். மேலும் அங்கு அசம்பாவித சம்பவங்கள் நடக்காத வண்ணம் தடுக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அதுமட்டுமின்றி 8 கிராமங்களிலும் வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் மூணாறு உள்பட 8 கிராமங்களில் 50 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இருப்பினும் ஒரு சில கடைகள், ஓட்டல்கள் திறந்திருந்தன. மாறாக வங்கிகள், அரசு அலுவலகங்கள் பள்ளிக்கூடங்கள் வழக்கம்போல் செயல்பட்டன.


Next Story