உடுமலை சங்கர் கொலையில் தொடர்புடைய தூக்கு தண்டனை கைதி திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜர்
உடுமலை சங்கர் கொலையில் தொடர்புடைய தூக்கு தண்டனை கைதி திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டார்.
திண்டுக்கல்,
திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்த சங்கர் என்பவர், கவுசல்யா என்ற பெண்ணை கலப்பு திருமணம் செய்ததன் எதிரொலியாக கடந்த 2016–ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். தமிழகத்தையே உலுக்கிய இந்த ஆணவக்கொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தை உள்பட சிலருக்கு கடந்த ஆண்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதில் திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ஜெகதீஷ் (வயது 36) என்பவரும் ஒருவர் ஆவார்.
இவர் மீது திண்டுக்கல் போலீஸ் நிலையங்களில் கொலை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 2013–ம் ஆண்டு பாண்டித்துரை என்பவரை கொலை செய்த வழக்கில், ஜெகதீஷ் முக்கிய குற்றவாளி ஆவார். இந்த வழக்கு திண்டுக்கல் 2–வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வருகிறது. நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. இதையடுத்து கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜெகதீசை போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வந்து, திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு பாலமுருகன் விசாரணையை அடுத்த மாதம் (ஜூலை) 20–ந்தேதிக்கு தள்ளிவைத்தார். பின்னர் ஜெகதீஷ் கோவை சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டார்.