அரசு அதிகாரிகள் கிணற்றை மூடியதால் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற விவசாயி
அரசு அதிகாரிகள் கிணற்றை மூடியதால் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி தீக்குளிக்க முயன்றார். மேலும் குடும்பத்துடன் அவர் தர்ணாவில் ஈடுபட்டார்.
தேனி,
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள மேக்கிழார்பட்டியை சேர்ந்தவர் பால்சாமி (வயது 65). விவசாயி. இவர், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று தனது மனைவி ராமுத்தாய், மகன் செல்வராஜ், மருமகள் நாகரத்தினம், மகள் சந்திரகலா ஆகியோருடன் வந்தார். இதில் சந்திரகலா தனது ஆண் குழந்தையை தூக்கி வந்து இருந்தார்.
கலெக்டர் அலுவலகத்தில் நின்று கொண்டு இருந்த போது பால்சாமி, மறைத்து எடுத்து வந்த கேனில் இருந்த மண்எண்ணெயை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். பின்னர் அவர், தனது குடும்பத்தினருடன் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதையறிந்த போலீசார் விரைந்து வந்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அவர் கூறுகையில், ‘ஆண்டிப்பட்டி பகுதியில் எனது தந்தை அனுபவித்து வந்த விவசாய நிலம் தற்போது எனது பெயரில் உள்ளது. இதில் நான் விவசாயம் செய்து பிழைப்பு நடத்தி வருகிறேன். இந்நிலையில் ஆதிதிராவிடர் நலத்துறையில் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்குவதற்காக இடம் தேர்வு செய்த போது, எனது நிலத்துக்கு அருகில் உள்ள இடம் தேர்வு செய்யப்பட்டது.
பின்னர் நான் பயன்படுத்தி வரும் நிலத்தையும் சேர்த்து எடுத்துக் கொண்டனர். எனது நிலத்தில் இருந்த கிணற்றை அதிகாரிகள் மூடி விட்டனர். எனவே நான் பயன்படுத்தி வந்த நிலத்தை எனக்கு திருப்பி கொடுக்க வேண்டும்’ என்று கூறினார்.
இதையடுத்து அவர்கள் அனைவரையும் போலீசார் விசாரணைக்காக தேனி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.