குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் கிராம மக்கள் கலெக்டரிடம் மனு
குடிநீர் உள்ளிட்ட அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண கோரி குல்லூர்சந்தை மற்றும் வெள்ளூர் கிராம மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
விருதுநகர்,
மக்கள் குறை தீர்க்கும் நாள் நிகழ்ச்சியின் போது கலெக்டரிடம் கொடுக்கப்பட்டுள்ள மனுக்களில் கூறியிருப்பதாவது:–
விருதுநகர் யூனியனில் உள்ள குல்லூர் சந்தை கிராமத்தில் பல மாதங்களாக குடிநீர் விநியோகம் இல்லை என்றும், பஞ்சாயத்து செயலரிடம் இதை பற்றி முறையிட்டால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் எங்களுக்கு தினசரி குடிநீர் விநியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரி உள்ளனர். மேலும் மெட்டுக்குண்டு சாலையை சீரமைப்பதற்காக தோண்டி 2 மாதங்கள் ஆகியும் பணி முடிவடையாததால் பெரும் சிரமம் ஏற்படுவதாகவும், சாலையை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரி உள்ளனர்.
விருதுநகர்அருகே உள்ள வெள்ளூர் கிராமத்தில் அடிப்படை தேவையான குடிநீர் மற்றும் சுகாதார வசதி கிடைக்காமல் சிரமப்படுவதாக அக்கிராம மக்கள் கூறி உள்ளனர். கிராமத்தில் உள்ள 10 ஆழ்குழாய் கிணறுகள் மற்றும் 5 சிறு தண்ணீர் தொட்டிகள் பயன்பாடு இல்லாத நிலையில் உள்ளது என்றும், இவற்றை சீராக்க உடனடியாக நடவடிக்கை எடுப்பது சுகாதாரம், சாலை மற்றும் தெருவிளக்கு வசதி செய்து கொடுக்க வேண்டும் என்றும் அக்கிராம மக்கள் கோரி உள்ளனர்.