பள்ளிக்கு செல்ல மறுத்து பிளஸ்–1 மாணவி தீக்குளித்து தற்கொலை


பள்ளிக்கு செல்ல மறுத்து பிளஸ்–1 மாணவி தீக்குளித்து தற்கொலை
x
தினத்தந்தி 19 Jun 2018 3:00 AM IST (Updated: 19 Jun 2018 1:57 AM IST)
t-max-icont-min-icon

பொங்கலூர் அருகே பள்ளிக்கு செல்ல மறுத்து பிளஸ்–1 மாணவி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

பொங்கலூர்,

பொங்கலூர் அருகே உள்ள நாச்சிபாளையம் வண்ணாந்துறை புதூரை சேர்ந்தவர் காமராஜ். இவருடைய மனைவி லட்சுமி. இந்த தம்பதியின் மகள் கவுரி(வயது 16). இவர் கோவையில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் விடுதியில் தங்கி பிளஸ்–1 படித்து வந்தார். இந்த நிலையில் ரம்ஜான் விடுமுறையை முன்னிட்டு கடந்த 16–ந்தேதி கவுரி விடுதியில் இருந்து வண்ணாந்துறை புதூருக்கு வந்தார்.

அப்போது கவுரி அவரது தயார் லட்சுமியிடம் இனிமேல் நான் பள்ளிக்கு செல்ல மாட்டேன் என்று கூறியுள்ளார். இதை கேட்டு கோபமடைந்த லட்சுமி, தனது மகளை சத்தம்போட்டு, பள்ளிக்கு சென்று படிக்கும் படி அறிவுரை கூறினார். இதனால் மனமுடைந்த கவுரி, கடந்த 16–ந்தேதி மாலை வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து தனது உடலில் ஊற்றி தீக்குளித்தார்.

இதில் அவருடைய உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. அப்போது வலி தாங்க முடியாமல் கவுரி சத்தம்போட்டுள்ளார். சத்தம் கேட்டு ஓடிவந்த பெற்றோர் தனது மகள் தீக்குளித்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அக்கம், பக்கத்தினர் உதவியுடன், தீயை அணைத்து தங்கள் மகளை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி கவுரி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் அவினாசிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story