மாட்டுவண்டி தொழிலாளர்களுடன் வந்து முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மனு


மாட்டுவண்டி தொழிலாளர்களுடன் வந்து முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மனு
x
தினத்தந்தி 19 Jun 2018 4:00 AM IST (Updated: 19 Jun 2018 1:58 AM IST)
t-max-icont-min-icon

கரூர் மாவட்டத்தில் உள்ள காவிரி மற்றும் அமராவதி ஆற்றில் மணல் அள்ள அனுமதி கோரி மாட்டுவண்டி தொழிலாளர்களுடன் சேர்ந்து வந்து முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மனு கொடுத்தார். அப்போது இது குறித்து சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெக்டர் அன்பழகன் பதில் கூறினார்.

கரூர்,

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 232 மனுக்கள் வரப்பெற்றன. மனுவை பொதுமக்களிடமிருந்து நேரடியாக மனுக்களை பெற்ற கலெக்டர், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட மனு தாரருக்கு தெரியப்படுத்துமாறு உத்தரவிட்டார்.

இதில் அ.ம.மு.க. மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜி, கரூர் மாவட்ட மாட்டு வண்டி தொழிலாளர்களுடன் சேர்ந்து வந்து கொடுத்த மனுவில், கரூர் மாவட்டத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாட்டு வண்டி தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் விவசாயம் செய்தும், கால்நடைகள் வளர்ப்பு உள்ளிட்டவற்றின் மூலம் பிழைப்பு நடத்துகின்றனர். இந்த நிலையில் தற்போது விவசாயம் பொய்த்து போனதாலும், முறையாக காவிரி, அமராவதி ஆற்றில் மணல் அள்ள அனுமதி மறுக்கப்படுவதாலும் அவர்களுக்கு வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. கால்நடைகளை பராமரிக்க கூட வழியில்லாமல் மிகுந்த சிரமத்தில் இருக்கின்றனர். எனவே கரூர் மாவட்ட மக்களின் கட்டுமான பணிகளுக்காக காவிரி, அமராவதி ஆறுகளில் மாட்டு வண்டியில் மணல் எடுத்து கொடுத்து பிழைப்பு நடத்தும் வகையில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் இதுகுறித்து சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கரூர் மாவட்டம் குளித்தலை தாலுகா பொய்யாமணியை சேர்ந்த வைரபெருமாள், சுக்கம்பட்டி சுப்ரமணி, நச்சலூர் ராஜா, சின்னபணையூர் பாலசுப்ரமணியம் மற்றும் ஜீயபுரத்தை சேர்ந்த ரவி உள்ளிட்ட நெல்கொள்முதல் வியாபாரிகள் திரண்டு வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில், நாங்கள் குளித்தலை பகுதியை சேர்ந்த 600 விவசாயிகளிடம் 29,249 மூட்டை நெல் கொள்முதல் செய்து, சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் வேப்பநத்தம் பகுதியை சேர்ந்த சின்னகண்ணு(வயது 38) மற்றும் அவரது மனைவி கவுசல்யா ஆகியோரது நிறுவனத்திற்கு விற்பனைக்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொடுத்தோம். அதற்குரிய பணம் ரூ.3½ கோடியை 15 நாட்களில் தந்து விடுவதாக கூறினார்கள். ஆனால் இதுவரை ரூ.61 லட்சத்து 54 ஆயிரம் மட்டுமே கொடுத்துள்ளனர். மீதி ரூ.2 கோடியே 89 லட்சத்தை தர மறுத்து இழுத்தடித்தனர். இந்த நிலையில் பணத்தை எப்போது திருப்பி தருவீர்கள் என சின்னகண்ணு, கவுசல்யாவிடம் கேட்டபோது உரிய பதில் இல்லை. எனவே பணமோசடியில் ஈடுபட்ட இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பணத்தை மீட்டு விவசாயிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

கரூர் அருகே வாங்கல் குப்புச்சிபாளையத்தை சேர்ந்த சிவக்குமார் என்பவரது மனைவி ஸ்ரீமதி(23) தனது கைக்குழந்தை மற்றும் குடும்பத்தினருடன் வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தார். அதில், எனது கணவர் சிவக்குமார் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள ஒரு செங்கல் சூளையில் லாரிக்கு படுதா கட்டும் வேலைக்காக சென்றார். அப்போது அங்கு லாரியில் மணல் ஏற்றி கொண்டு கடத்தியது தெரிய வந்தது. பொக்லைன் மூலம் மணலை அள்ளி லாரியில் போட்டு கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக பொக்லைன் எந்திரம் மோதியதில் எனது கணவர் சிவக்குமார் படுகாயமடைந்தார். அவரை ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டனர். எனவே அவருக்கு உரிய மருத்துவ உதவி கிடைக்க வேண்டும். மேலும் மணல் கடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

குளித்தலை வட்டம் வீரம்பூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதி தெருக்களில் கடந்த சில வாரங்களாக தெருவிளக்குகள் சரிவர எரிவதில்லை. இதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் குடிநீர் சீராக வினியோகம் செய்யப்பட வேண்டும் என்று கூறியிருந்தனர். கரூர் அருகே கள்ளப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதுமான அளவில் இடவசதி இல்லாததால் நோயாளிகளில் சிரமப்படுகின்றனர். எனவே நவீன வசதிகளுடன் இந்த சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டித்தரப்பட வேண்டும் என சமூக ஆர்வலர் லாலாப்பேட்டை நாகராஜன் அளித்த மனுவில் கூறியிருந்தார்.

இந்து மக்கள் கட்சியின் கரூர் நகர தலைவர் ஈஸ்வரன் உள்ளிட்டோர் அளித்த மனுவில், கரூர் நகராட்சிக்கு உட்பட்ட தாந்தோன்றிமலை முதல் சுங்ககேட் வரையும், சில பகுதிகளிலும் தள்ளுவண்டி கடைகள் வைத்து போக்குவரத்திற்கு சிலர் இடையூறாக வியாபாரம்செய்கின்றனர். எனவே இது பற்றி உரிய நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கரூர் நகராட்சியிலுள்ள அரசு டாஸ்மாக் கடை பாரில் கூடுதல் விலைக்கு திருட்டுத்தனமாக மது விற்கப்படுவதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். கரூர் அரசு காலனி பகுதியில் சாக்கடை வடிகாலை சிலர் அடைத்து வைத்திருப்பது குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி அப்பகுதியை சேர்ந்த சுப்ரமணி உள்ளிட்டோர் மனு கொடுத்தனர்.

இந்த கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக மனு அளித்த 3 பயனாளிகளுக்கு அம்மனு மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு 1 பயனாளிக்கு பிரெய்லி கைக்கடிகாரம், 2 பயனாளிகளுக்கு இலவச பஸ் பயண அட்டையினையும் கலெக்டர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், மக்கள் குறைதீர்க்கும் தனித்துணை கலெக்டர் என்.எஸ்.பாலசுப்பிரமணியன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரி காமாட்சி மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story