ராமன்கோவில் ஊராட்சியில் ஆபத்தான நிலையில் உள்ள பள்ளி கட்டிடத்தை இடிக்க கோரிக்கை
ராமன்கோவில் ஊராட்சியில் ஆபத்தான நிலையில் உள்ள பள்ளி கட்டிடத்தை இடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ராமன்கோவில் ஊராட்சியில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளிக்கூடத்தில் ராமன்கோவில், ராமன்கோவில் காலனி, ராமச்சந்திராபுரம், மடத்துக்குப்பம் போன்ற பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவர்கள், 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயின்று வருகின்றனர்.
இந்த பள்ளி கட்டிடத்தின் உள்பகுதி மற்றும் வெளிப்பகுதிகளில் விரிசல்கள் ஏற்பட்டு அதனை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 2014-15-ம் நிதியாண்டில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டது. இந்த கட்டிடத்துக்கு அருகே சத்துணவு சமையல் கட்டிடம் உள்ளது.
இடிக்க கோரிக்கை
பழுதடைந்த கட்டிடத்தில் இருந்த மாணவர்கள், தற்போது புதிதாக கட்டப்பட்டு உள்ள கூடுதல் வகுப்பறை கட்டிடத்துக்கு மாற்றப்பட்டு அங்கு பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் பழுதடைந்த பழைய பள்ளி கட்டிடம், கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக பூட்டியே கிடக்கிறது.
இந்த பாழடைந்த கட்டிடத்தின் அருகிலேயே பள்ளி மாணவர்கள் அடிக்கடி சென்று வருவதும், விளையாடுவதுமாக இருந்து வருகின்றனர். ஆபத்தான நிலையில் உள்ள இந்த கட்டிடத்தால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், விபரீதம் ஏற்படுவதற்கு முன்பாக ஆபத்தான அந்த பழைய பள்ளி கட்டிடத்தை இடித்து அகற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் மற்றும் அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story