வல்லம்பேடு குப்பத்தில் இருந்து வெளியேறிய ஒருதரப்பு மீனவர்கள் மீண்டும் குடியமர்த்தப்பட்டனர்
கும்மிடிப்பூண்டி அருகே வல்லம்பேடு குப்பத்தில் இருந்து வெளியேறிய ஒரு தரப்பு மீனவர்கள், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் அந்த கிராமத்தில் குடியமர்த்தப்பட்டனர்.
கும்மிடிப்பூண்டி,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த மெதிப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட வல்லம்பேடு குப்பம் மீனவ கிராமத்தில் சுமார் 140 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் எல்லப்பன்(வயது 52) மற்றும் சத்திரத்தான்(55) ஆகியோர் தலைமையில் இரு கோஷ்டிகளாக செயல்பட்டு வந்தனர்.
கடந்த 2016-ம் ஆண்டு எல்லப்பன் ஆதரவாளர்களான அண்ணாதுரை(45), குணசேகர்(60) ஆகிய 2 பேரை சத்திரத்தான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வெட்டிக்கொலை செய்தனர். மேலும் சிலரை பயங்கர ஆயுதங்களால் தாக்கியதில் 15-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இது தொடர்பாக ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சத்திரத்தான் மற்றும் அவரது ஆதரவாளர்களை கைது செய்தனர்.
கலெக்டரிடம் மனு
இந்த பிரச்சினையை தொடர்ந்து சத்திரத்தான் ஆதரவாளர்களான 28 குடும்பங்களைச்சேர்ந்த 108 பேர், வல்லம்பேடு குப்பத்தை விட்டு வெளியேறி, நொச்சிக்குப்பம் கிராமத்தில் உள்ள சமுதாய கூடத்தில் தஞ்சம் புகுந்தனர்.
இதற்கிடையில் அவர்கள், வல்லம்பேடு குப்பத்தில் இருந்து தாங்கள் விரட்டி அடிக்கப்பட்டதாகவும், குழந்தைகளின் படிப்பு மற்றும் பொருளாதார பிரச்சினைகளை கருத்தில் கொண்டு மீண்டும் தங்களை வல்லம்பேடு குப்பத்துக்கு செல்ல வழி வகை செய்திட வேண்டும். அல்லது கருணை கொலை செய்திடுமாறு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
பதிலுக்கு எல்லப்பன் தரப்பினர், மேற்கண்ட நபர்களால் தாங்கள்தான் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், அவர்கள் மீண்டும் வல்லம்பேடு குப்பத்துக்குள் வந்தால் எங்களுக்கு உரிய பாதுகாப்பு தர வேண்டும் என கலெக்டரிடம் பதில் மனு அளித்தனர்.
சமாதான கூட்டம்
இதையடுத்து இருதரப்பினர் இடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் வகையில் கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தில் பொன்னேரி கோட்டாட்சியர் முத்துசாமி தலைமையில் 5 கட்ட சமாதான கூட்டம் நடந்து முடிந்தது.
அப்போது சத்திரத்தான் தரப்பினர் அனைவரையும் மீண்டும் வல்லம்பேடு குப்பத்திற்குள் குடியமர்த்துவது என்றும், இரு தரப்புக்கும் இடையே ஒருமித்த கருத்து ஏற்படும் வரையில் சட்டம்-ஒழுங்கை பாதிக்கும் வகையில் தனிப்பட்ட முறையில் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி இன்றி எந்தவொரு கூட்டத்தையோ, விழாவையோ நடத்த மாட்டோம் என்றும் அந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆனால் வல்லம்பேடு கிராமத்தில் உள்ள எல்லப்பன் தரப்பினரில் சிலர் இதனை முழுமையாக ஏற்கவில்லை.
மீண்டும் குடியமர்த்தினர்
இந்தநிலையில் நேற்று பொன்னேரி கோட்டாட்சியர் முத்துசாமி தலைமையில் கும்மிடிப்பூண்டி தாசில்தார் ராஜகோபால், துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் ஆகியோர் முன்னிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சத்திரத்தான் தரப்பை சேர்ந்தவர்கள், 3 வேன்கள் மற்றும் 2 ஷேர் ஆட்டோக்களில் வல்லம்பேடு குப்பத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எல்லப்பன் தரப்பினரில் சிலர் அதிகாரிகள் மற்றும் போலீசாருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. இருப்பினும் அவர்களை சமாதானப்படுத்தி அதே கிராமத்தில் ஏற்கனவே தங்கிருந்த வீடுகளில் சத்திரத்தான் ஆட்களை அதிகாரிகள் குடியமர்த்தினர்.
பலத்த போலீஸ் பாதுகாப்பு
வீட்டை விட்டு வெளியே சென்று சுமார் 2 ஆண்டுகள் ஆகி விட்டதால் தற்போது தங்களது வீடுகளில் உள்ள பொருட்கள் அனைத்தும் முழுமையான சேதம் அடைந்து இருப்பதாகவும், குடிதண்ணீர் மற்றும் மின்சார வசதி இன்றி வசிப்பதற்கு தகுதியற்ற நிலையில் உள்ள இத்தகைய வீடுகளை சீரமைத்து தர வேண்டும் என அவர்கள் அதிகாரிகளிடம் முறையிட்டனர்.
இதனையடுத்து அங்கு தற்போது அதிகாரிகள் முகாமிட்டு பழுதாகி உள்ள வீடுகளை சீரமைக்கவும், மின்வசதி மற்றும் குடிதண்ணீர் வசதி கிடைக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
மீனவ கிராமமான வல்லம்பேடு குப்பத்தில் இருதரப்பினருக்கும் இடையே மேலும் பிரச்சினை ஏற்படாமல் இருக்கும் வகையில் அங்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story