மாநில அரசின் உரிமைகளுக்காக அனைத்து கட்சியினரும் டெல்லியில் போராட வேண்டும், அன்பழகன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்


மாநில அரசின் உரிமைகளுக்காக அனைத்து கட்சியினரும் டெல்லியில் போராட வேண்டும், அன்பழகன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
x
தினத்தந்தி 19 Jun 2018 4:30 AM IST (Updated: 19 Jun 2018 2:10 AM IST)
t-max-icont-min-icon

பட்ஜெட்டிற்கு அனுமதி பெற அனைத்து கட்சியினரும் டெல்லியில் போராட வேண்டும் என்று அன்பழகன் எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளார்.

புதுச்சேரி,

புதுச்சேரி சட்டமன்ற அ.தி.மு.க. தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–

டெல்லியில் நடைபெற்ற நிதிஆயோக் கூட்டத்தில் மாநிலத்தின் நலன் குறித்த கருத்துக்களை பிரதமரிடம் எடுத்துக்கூற முதல்–அமைச்சர் நாராயணசாமி தவறி விட்டார். திட்டக்குழு கலைக்கப்பட்டு நிதி ஆயோக் அமைக்கப்பட்ட பின்னர் இந்தியாவின் எந்த மாநிலத்திற்கும் சிறப்பு மாநில அந்தஸ்து வழங்கக் கூடாது என கொள்கை முடிவு அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் முதல்–அமைச்சர் நாராயணசாமி மாநில அந்தஸ்து கேட்பதை தவிர்த்து சிறப்பு மாநில அந்தஸ்து கேட்டிருப்பது சிறுபிள்ளைத்தனமானதாகும்.

நிதி ஆயோக் கூட்டத்தில் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு அனுமதி பெறுவது, ரோடியர் மில்லை திறக்க நிதி கேட்பது, சுற்றுச்சூழலை பாதிக்காத மத்திய அரசு நிறுவனங்களை புதுவைக்கு கொண்டு வரும்படி வலியுறுத்துவது, ஒப்பந்தம் போட்டபடி துறைமுக அபிவிருத்தி திட்டத்தை உடனே செயல்படுத்துவது போன்றவற்றை முன்னிறுத்தி பேசி இருக்கலாம். அதை விடுத்து கவர்னரை விமர்சித்து பேசியதால் அதற்கு மத்திய உள்துறை மந்திரி கண்டனம் தெரிவித்து இருப்பது மாநிலத்திற்கு இழுக்கான செயலாகும்.

கவர்னரை எதிர்ப்பதில் முதல்–அமைச்சர் மற்றும் அமைச்சர்களிடையே கருத்து ஒற்றுமை இல்லை. காலையில் முதல்–அமைச்சர் எதிர்த்தால், மாலையில் 2 அமைச்சர்கள் கவர்னரை சந்தித்து பரஸ்பரம் பேசுகின்றனர்.

சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை கூட்டி, பட்ஜெட்டை தாக்கல் செய்யாததால் இந்த அரசு முழுமையான தோல்வியை தழுவி உள்ளது. தற்போதும் பட்ஜெட்டிற்கு நாளை அனுமதி கிடைக்கும், நாளை மறுநாள் கிடைக்கும் என்று கூறி வருகிறார். தனது தோல்வியை ஏற்றுக்கொண்டு முதல்–அமைச்சர் நாராயணசாமி உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

டெல்லியில் தங்கள் உரிமையை மீட்டெடுக்க போராடும் முதல்–அமைச்சர் கெஜரிவால் போல் நாராயணசாமியும் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். பட்ஜெட்டிற்கு அனுமதி பெற அனைத்துக் கட்சியினரையும் டெல்லிக்கு அழைத்துச்சென்று அங்கு மத்திய அரசுக்கு எதிராக போராட வேண்டும். கவர்னர் அலுவலகத்தின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தலாம். அதனை ஏன் செய்யவில்லை? செயற்கையான நிதி தட்டுப்பாட்டை ஏற்படுத்தி புதுச்சேரி அரசை முடக்க மத்திய அரசு முயற்சிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது எம்.எல்.ஏ.க்கள் பாஸ்கர், வையாபுரி மணிகண்டன் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story