அம்பத்தூர் தாலுகாவில் நூற்றுக்கணக்கானவர்களுக்கு 2 வருடமாக முதியோர் உதவித்தொகை நிறுத்திவைப்பு
அம்பத்தூர் தாலுகாவில் 2 வருடங்களாக நூற்றுக்கணக்கானவர்களுக்கு முதியோர் உதவித்தொகை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
அம்பத்தூர்,
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அம்பத்தூர் தாலுகா அலுவலகத்திற்கு உட்பட்ட பட்டரவாக்கம், மேனாம்பேடு, ஒரகடம், கொரட்டூர், பாடி, முகப்பேர், மண்ணூர், அம்பத்தூர், அத்திப்பட்டு உள்ளிட்ட 9 வருவாய் கிராமங்களில் முதியோர் உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்ட மகளிர், திருமணமாகாத வயதான மகளிர், உழைக்கும் திறனற்ற முதியோர், உடல் ஊனமுற்றோர் என 12க்கும் மேற்பட்ட நலத்திட்டங்களின் கீழ் 1000, மற்றும் 2000 ரூபாய் இலவச உதவி பெற்று வருகிறார்கள்.
அம்பத்தூர் தாலுகாவில் மட்டும் முதியோர் உதவி திட்டம் மூலம் சுமார் 3 ஆயிரம் பேரும், பிற நலத்திட்டங்கள் மூலம் 2,882 பேரும் மத்திய, மாநில அரசுகளின் உதவியை பெற்று வருகிறார்கள். கடந்த ஆண்டுகளில் அம்மா திட்டம் மூலம் நூற்றுக்கணக்கானவர்கள் இப்படி உதவித்தொகை பெற மாவட்ட நிர்வாகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
நிறுத்திவைப்பு
இந்நிலையில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி கடந்த 2 வருடங்களாக அம்பத்தூர் தாலுகாவில் மட்டும் சுமார் 500க்கும் மேற்பட்ட முதியோர் உதவித்தொகை பெறும் பயனாளிகளுக்கு உதவித்தொகை வழங்காமல் சமூகநலத்துறை நிறுத்திவிட்டதாக தெரிகிறது. இதில் பாதிக்கப்பட்ட முதியவர்கள் தினந்தோறும் தாலுகா அலுவலகங்களில் வந்து மனு கொடுத்து செல்கின்றனர்.
இதுகுறித்து அம்பத்தூர் தாலுகா அலுவலக ஊழியர்கள் கூறும்போது, கடந்த காலங்களில் நடந்த அம்மா முகாம்களில் ஏராளமானோர் தவறான தகவல் தந்தும், இருப்பிடம் குறித்து உரிய தகவல் தராமலும் இருந்த காரணத்தால் உதவித்தொகை வழங்குவது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உதவித்தொகை பெற்றவர்கள் தற்போது நிறுத்திவைக்கப்பட்டவர்கள் பட்டியலில் இருந்தால் அவர்கள் மீண்டும் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து மீண்டும் உதவித்தொகையை பெறலாம் என தெரிவித்தனர்.
12 தாலுகாவில் நிறுத்தம்
மாவட்ட நிர்வாகம் தரப்பில் கூறும்போது, திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட அம்பத்தூர், ஆவடி, பூந்தமல்லி, பொன்னேரி உள்ளிட்ட 12 தாலுகாவில் உள்ள சுமார் 600க்கு மேற்பட்ட வருவாய் கிராமங்களில் ஆயிரக் கணக்கான பேருக்கு உதவித்தொகை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. உரிய ஆவணங்கள் பரிசீலனைக்கு பின்பு அவர்களுக்கு உதவித்தொகை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றனர்.
Related Tags :
Next Story