நெற்குன்றத்தில் கால்வாய் இல்லாததால் வீடுகளின் முன்பு தேங்கும் கழிவு நீர்
நெற்குன்றத்தில் கால்வாய் இல்லாததால் வீடுகளின் முன்பு கழிவு நீர் தேங்கி நிற்கிறது.
பூந்தமல்லி,
பெருநகர சென்னை மாநகராட்சி 11 வது மண்டலத்திற்குட்பட்ட 148 வது வார்டு நெற்குன்றம் கோவர்த்தன் நகர் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது.
நெற்குன்றம் ஊராட்சியாக இருந்தபோது இங்கு உள்ள 4 மற்றும் 5-வது தெருவில் குறைந்த அளவு ஆழம் கொண்ட கழிவு நீர் கால்வாய் கட்டப்பட்டது.
இதில் கழிவு நீர் சரியாக செல்லாத காரணத்தால் சில மாதங்களுக்கு முன்பு இந்த கால்வாயை ஜே.சி.பி. எந்திரம் மூலம் இடித்து தள்ளினார்கள். ஆனால் இதுவரை இந்த கால்வாய் சீரமைக்கப்படாமல் அப்படியே உள்ளது.
சாலைகளில் வழிந்து ஓடுகிறது
இதனால் கழிவு நீர் செல்ல வழியில்லாமல் வீடுகளின் முன்பு குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் வீட்டின் முன்பு பலகைகளை கொண்டு பாலம் போல் அமைத்து வீடுகளுக்குள் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி கழிவு நீர் அதிக அளவில் தேங்கி நிற்பதால் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் மழைக்காலங்களில் கழிவு நீரோடு, மழை நீரும் கலந்து சாலைகளில் வழிந்து ஓடுகிறது.
இரவு நேரங்களில் வேலை முடிந்து வருபவர்களை நாய்கள் துரத்துவதால் அவர்கள் பயந்து ஓடுகையில் தேங்கி நிற்கும் கழிவு நீரில் தவறி விழுந்து விடுகின்றனர்.
பல்வேறு போராட்டங்களில் ஈடுபடுவோம்
அதுமட்டுமின்றி தெருவில் விளையாடும் சிறுவர்களும் இப்படி தவறி விழுந்து விடுகின்றனர். இது போன்ற சம்பவம் இங்கு அதிகளவில் நடந்துள்ளது.
எனவே கழிவு நீர் கால்வாயை புதிதாக அமைத்து கொடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை என்று கூறப்படுகிறது.
இனியும் அதிகாரிகள் கழிவு நீர் கால்வாயை அமைக்கவில்லை என்றால், ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை அரசிடம் ஒப்படைப்பது உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபடுவோம் என மக்கள் ஆதங்கத்துடன் கூறுகின்றனர்.
பொதுமக்கள் எதிர்பார்ப்பு
இதே போல் 145 வது வார்டு நெற்குன்றம் அகத்தியர் நகர் 2-வது தெருவில் உள்ள கழிவு நீர் கால்வாய் முறையாக பராமரிக்கப்படாததால் கழிவு நீர் வெளியேறி சாலையில் குளம் போல் தேங்கி நிற்கிறது.
இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே உடனே கால்வாயை சீரமைக்க வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
தங்களுடைய நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என நெற்குன்றம் மக்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
Related Tags :
Next Story