டாஸ்மாக் கடைக்கு தீவைப்பு ரூ.22 லட்சம் மதுபாட்டில்கள் நாசம்


டாஸ்மாக் கடைக்கு தீவைப்பு ரூ.22 லட்சம் மதுபாட்டில்கள் நாசம்
x
தினத்தந்தி 19 Jun 2018 3:40 AM IST (Updated: 19 Jun 2018 3:40 AM IST)
t-max-icont-min-icon

கடையநல்லூரில் டாஸ்மாக் கடைக்கு மர்மநபர்கள் தீவைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் ரூ.22 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் எரிந்து நாசமானது.

கடையநல்லூர்,

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள மேலக்கடையநல்லூர்-பண்பொழி சாலையில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் மது பிரியர்களின் கூட்டம் அதிகமாக காணப்படும். இதனால் பள்ளிக்கூட மாணவ-மாணவிகள், பெண்கள் பாதிக்கப்படுவதாக கூறி அந்த டாஸ்மாக் கடையை அங்கிருந்து அகற்ற வேண்டும் என முகமது அபுபக்கர் எம்.எல்.ஏ. மற்றும் பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

மேலும் அப்பகுதி பொதுமக்கள், அந்த டாஸ்மாக் கடைக்கு பூட்டுப் போடும் போராட்டமும் நடத்தினர். இருப்பினும் அங்கிருந்து கடை அகற்றப்படாததால் அவர்கள் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தினர்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் பார் மற்றும் டாஸ்மாக் கடை தீப்பிடித்து எரிந்ததால் புகை வெளியே வந்து கொண்டிருந்தது. டாஸ்மாக் கடைக்கு பின்புறம் தான் இடத்துக்கு சொந்தமான உரிமையாளர் வீடு உள்ளது. அவர் அதிகாலை 5 மணிக்கு எழுந்து நடைபயிற்சிக்கு செல்லும் போது கடையில் தீ எரிந்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக கடை மேலாளர் வடமலை முத்து, மேற்பார்வையாளர் முருகேசன் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் இதுபற்றி கடையநல்லூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வீரர்கள் வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்து, மேலும் தீ பரவாமல் தடுத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் பாலாஜி, சப்-இன்ஸ்பெக்டர் பரிமளா, கோட்ட கலால் அதிகாரி சுதந்திரராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் பாரின் சுவரில் துளையிடப்பட்டு இருந்தது. அதன் வழியாக மர்ம நபர்கள் வந்து டாஸ்மாக் கடைக்கு தீவைத்ததும் தெரிய வந்தது.

நேற்று முன்தினம் இரவில் தான் அந்த டாஸ்மாக் கடைக்கு ரூ.18 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் வந்துள்ளது. அதனுடன் சேர்த்து கடையில் இருந்த ரூ.4 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் என மொத்தம் ரூ.22 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் தீயில் எரிந்து நாசமானது.

இந்த சம்பவம் தொடர்பாக கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, டாஸ்மாக் கடைக்கு தீவைத்த மர்மநபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story