மத்திய அரசு அமைத்த காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முதல்-மந்திரி குமாரசாமி எதிர்ப்பு


மத்திய அரசு அமைத்த காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முதல்-மந்திரி குமாரசாமி எதிர்ப்பு
x
தினத்தந்தி 19 Jun 2018 8:03 AM IST (Updated: 19 Jun 2018 8:04 AM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை முதல்-மந்திரி குமாரசாமி சந்தித்து பேசினார்.

புதுடெல்லி,

மத்திய அரசு அறிவித்த காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி, நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தி இந்த ஆணையத்தை அமைக்கவேண்டும் என கூறி இருக்கிறார்.

காவிரி நீர் பிரச்சினை தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, தண்ணீரை பகிர்ந்து கொள்ள காவிரி மேலாண்மை ஆணையத்தையும், ஒழுங்காற்றுக் குழுவையும் அமைக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

அதன்படி அந்த இரு அமைப்புகளையும் ஏற்படுத்திய மத்திய அரசு அதுபற்றிய அறிவிப்பை கடந்த 1-ந்தேதி அரசிதழில் வெளியிட்டது.

காவிரி மேலாண்மை ஆணையத்தில் தலைவர் மற்றும் மத்திய அரசின் உறுப்பினர்களுடன் தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்களின் சார்பில் தலா ஒரு உறுப்பினர் இடம்பெறுவார். இதேபோல் ஒழுங்காற்றுக் குழுவிலும் 4 மாநிலங்களின் சார்பிலும் தலா ஒருவர் உறுப்பினராக இடம்பெறுவார்.

தமிழகத்தின் சார்பில் காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு தமிழக பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் எஸ்.கே.பிரபாகரையும், ஒழுங்காற்றுக் குழுவுக்கு நீர்வள ஆதார அமைப்பின் தலைமை பொறியாளர் ஆர்.செந்தில்குமாரையும் உறுப்பினராக நியமிக்க தமிழக அரசு பரிந்துரைத்து இருக்கிறது.

இதேபோல் கேரள அரசும், புதுச்சேரி அரசும் தங்கள் தரப்பிலான உறுப்பினர்களை பரிந்துரைத்து இருக்கின்றன. ஆனால் கர்நாடக அரசு மட்டும் தங்கள் தரப்பிலான உறுப்பினர்களின் பெயர்களை இன்னும் பரிந்துரைக்கவில்லை.

காவிரி மேலாண்மை ஆணையமும், ஒழுங்காற்றுக்குழுவும் அமைக்கப்பட்டால்தான் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி, சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு தண்ணீரை பகிர்ந்து அளிக்க முடியும் என்பதால், கடந்த 12-ந்தேதிக்குள் உறுப்பினர்களின் பெயர்களை பரிந்துரைக்குமாறு கர்நாடகத்துக்கு மத்திய நீர்வளத்துறை ‘கெடு’ விதித்து இருந்தது. ஆனால் கர்நாடக அரசு இன்னும் பெயர்களை பரிந்துரைக்கவில்லை.

இந்த நிலையில், டெல்லியில் நேற்று முன்தினம் பிரதமர் தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொண்ட கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி நேற்று அங்கு மத்திய நீர்வளத்துறை மந்திரி நிதின் கட்காரி, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோரை சந்தித்து பேசினார். பின்னர் பிரதமர் மோடியையும் சந்தித்து பேசினார்.

அதன்பிறகு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

நாடாளுமன்றத்தில் விவாதிக்காமலேயே காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்து அதுபற்றிய அறிவிப்பை மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டது சரி அல்ல. இதுபற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும். விவாதம் நடத்தித்தான் காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்கவேண்டும்.

காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல. என்றாலும் அந்த அமைப்பை ஏற்படுத்தி அதுபற்றி அரசிதழில் அறிவிப்பு வெளியிடுவது தொடர்பாக சில நடைமுறை சிக்கல்கள் உள்ளன. அது சரி செய்யப்படவேண்டும். காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு, கர்நாடக அரசின் சார்பில் இடம்பெறும் உறுப்பினரின் பெயரை உரிய நேரத்தில் நாங்கள் அனுப்பி வைப்போம்.

காவிரி மேலாண்மை ஆணையம் 10 நாட்களுக்கு ஒரு முறை அணைகளின் நீர்மட்டத்தை அளவிடவும், என்ன பயிர் செய்யவேண்டும் என்று விவசாயிகளுக்கு உத்தரவிடும் அதிகாரமும் காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு வழங்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது விஞ்ஞான பூர்வமான நடவடிக்கை அல்ல என்பதோடு, விவசாயிகளையும் பாதிக்கும். மத்திய அரசின் இந்த நடவடிக்கை மாநிலங்களின் உரிமையை பறிப்பதாக உள்ளது.

கூட்டாட்சி முறையில் மக்களுக்கு நன்மை பயக்கும் முடிவுகளை எடுக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு உள்ளது. கர்நாடகம், தமிழகம் ஆகிய இரு மாநிலங்களின் விவசாயிகளும் பயன் அடையவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

கர்நாடகத்தில் இருந்து கூடுதலாக திறந்து விடப்படும் நீரை தமிழகம் முறையாக பயன்படுத்துவது கிடையாது. அது வீணாக கடலில் கலக்கிறது. தமிழக மக்கள் எங்கள் சகோதரர்கள். அவர்களுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்க மாட்டோம். போதுமான தண்ணீர் உள்ளபோது தமிழகத்துக்கு தண்ணீர் கொடுப்போம். இந்தமுறை எந்த உத்தரவும் பிறப்பிக்கும் முன்பே, தமிழகத்துக்கு தண்ணீர் கொடுத்து உள்ளோம்.

காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்பான விவகாரத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்வது தொடர்பாக சட்ட வல்லுனர்களிடம் ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும். இவ்வாறு குமாரசாமி கூறினார்.

மேலும் இந்த பிரச்சினை தொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். அதில், இந்த பிரச்சினையில் தாங்கள் தலையிட்டு காவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்றுக் குழுவை அமைப்பது மற்றும் செயல்பாட்டுக்கு கொண்டுவருவது குறித்து தற்போது எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்துக்கு அறிவுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டு உள்ளார்.

அணைக்கட்டுகளை இயக்குவது, சாகுபடி குறித்து தீர்மானிப்பது ஆகியவற்றை காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்றுக் குழுவின் அதிகாரத்துக்குள் கொண்டு வருவது அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்றும் அதில் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

Next Story