பிளஸ்-2 படிப்பிற்கு பிறகு கல்வியுடன், வேலை வழங்கும் ராணுவ நுழைவுத்தேர்வுகள்!


பிளஸ்-2 படிப்பிற்கு பிறகு கல்வியுடன், வேலை வழங்கும் ராணுவ நுழைவுத்தேர்வுகள்!
x
தினத்தந்தி 19 Jun 2018 3:06 PM IST (Updated: 19 Jun 2018 3:06 PM IST)
t-max-icont-min-icon

போட்டிகள் மிகுந்ததாக மாறியிருக்கிறது வேலைவாய்ப்பு உலகம். பள்ளிப்படிப்பு முடிந்ததும் ஒவ்வொரு படிப்புக்கும் தனித்தனியே நுழைவுத் தேர்வுகள் எழுதி குறிப்பிட்ட காலம் படிக்க வேண்டியிருக்கிறது.

 வேலை பெறுவதற்காக  மீண்டும் போட்டித் தேர்வுகளை எழுத வேண்டியுள்ளது. இத்தகைய சிரமங்கள் இல்லாமல், ராணுவத்தின் நுழைவுத் தேர்வுகளை எழுதினால் பயிற்சியுடன், வேலைவாய்ப்பு பெற முடியும். சில பயிற்சிகளில் குறிப்பிட்ட காலம் படித்து சான்றிதழ் பெறவும் முடியும். பயிற்சி, படிப்பு, வேலைவாய்ப்பு வழங்கும் ராணுவ போட்டித் தேர்வுகளைப் பற்றி சிறிது பார்ப்போம்...

முப்படைத் தேர்வு :

ராணுவத்தின் முப்படைகளுக்கும் அதிகாரி தரத்திலான பணியிடங்களுக்கு பிளஸ்-2 படித்தவர்களை நியமிக்க என்.டி.ஏ. அண்ட் என்.ஏ. எக்ஸாம் (NDA and NA exam) என்ற தேர்வு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (யூ.பி.எஸ்.சி.) நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும் கணிசமான எண்ணிக்கையில் மூன்று படைப்பிரிவுகளுக்கும் பிளஸ்-2 படித்த இளைஞர்கள் சேர்க்கப்படுகிறார்கள். சில தொழில்நுட்ப பிரிவு பணிகளுக்கு மட்டும் அறிவியல் பாடப்பிரிவுகளில் படித்தவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். மற்ற பிரிவு பணிகளுக்கு எந்தப் பிரிவை தேர்ந்தெடுத்து பிளஸ்-2 படித்து தேர்ச்சி பெற்றிருந்தாலும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வுக்கு உட்படுத்தப்படுவார்கள். அதில் தேர்ச்சி பெறுபவர்கள் உடல் அளவுத் தேர்வுகள், நுண்ணறிவுத்திறன் சோதனைக்குப் பிறகு பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். 3 முதல் 4 ஆண்டுகள் பயிற்சி நடைபெறும். தொழில்நுட்ப பயிற்சி பெறுபவர்கள் அதற்கான சான்றிதழ் பெற முடியும். உயர் அதிகாரி வரை பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு பெறக்கூடிய அதிகாரி பணியை பெற்றுத் தரும் பயிற்சி சேர்க்கை இது. சமீபத்தில்கூட இந்தத் தேர்வுக்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. சுமார் 400 பேர் பயிற்சியில் சேர்க்கப்படுகிறார்கள். இதில் சேர விரும்புபவர்கள் இது பற்றிய விவரத்தை www.upsc.gov.in இணையதளத்தில் பார்க்கலாம்.

பி.டெக். பயிற்சி :

பிளஸ்-2 படித்தவர்களை தேர்வு செய்து பி.டெக் பயிற்சி அளித்து, அதிகாரி தரத்திலான பணி வழங்கும், ராணுவ நுழைவுத் தேர்வு இந்திய கடற்படையால் நடத்தப்படுகிறது. பி.டெக் என்ட்ரி ஸ்கீம் எனப்படும் இந்த பயிற்சி சேர்க்கை 2 வாரங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அறிவியல் பிரிவில் பிளஸ்-2 படிப்பை படித்தவர்கள், குறிப்பிட்ட பாடங்களில் 60 சதவீத மதிப்பெண் பெற்றவர்கள் இந்த பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். இவர்கள் அடிப்படை ராணுவ பயிற்சியுடன், 4 ஆண்டுகாலம் பி.டெக் தொழில்நுட்ப படிப்பையும் படிக்க முடியும். படித்து முடித்ததும் அதற்கான சான்றிதழும், ராணுவத்தில் அதிகாரியாக பணி நியமனமும் கிடைக்கும்.

மாலுமி பணிக்கான தேர்வு:

கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், கணினி அறிவியல் போன்ற பாடங்களை கொண்ட பிளஸ்-2 படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களை, கப்பல்களை இயக்கும் மாலுமியாக பயிற்சி அளித்து பணி நியமனம் செய்கிறது இந்திய கடற்படை. இதற்காக ‘செய்லர் என்ட்ரி ஸ்கீம்’ எனும் பயிற்சி சேர்க்கை ஆண்டுதோறும் அறிவிக்கப்படும். இதற்கான அறிவிப்புகளும் சமீபத்தில் வெளியானது நினைவிருக்கலாம். இவர்கள் சில்காவில் உள்ள இந்திய கடற்படை தளத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு பணிவாய்ப்பை பெற முடியும்.

தொழில்நுட்ப பயிற்சி சேர்க்கை:

கடற்படையைப் போலவே, ராணுவத்தின் தரைப்படைப் பிரிவிலும் தொழில்நுட்ப பயிற்சி சேர்க்கை உள்ளது. ஆர்மி டெக்னிக்கல் என்ட்ரி ஸ்கீம் (டி.இ.எஸ்.) எனப்படும் இதற்கான நுழைவுத் தேர்வு ஆண்டுதோறும் 2 முறை நடைபெறுகிறது. பிளஸ்-2 படித்த இளைஞர்கள் இதில் சேர்க்கப்பட்டு துப்பாக்கி மற்றும் ராணுவ பொறியியல் எந்திரங்கள் தயாரித்தல், பயன்படுத்துதல் போன்றவற்றுக்கான பயிற்சி வழங்கப்படும். பயிற்சி முடித்ததும் அதிகாரியாக பணி நியமனமும் பெறலாம்.

இந்த ராணுவ தேர்வுகளுக்கான விரிவான விவரங்களை www.joinindiaarmy.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

கடல்சார் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு :

இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் நடத்தும் அகில இந்திய நுழைவுத் தேர்வு இது. பிளஸ்-2 அறிவியல் பிரிவில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த தேர்வை எழுதலாம். நாட்டிகல் சயின்ஸ் (டி.என்.எஸ்.) டிப்ளமோ படிப்பு மற்றும், பி.எஸ்சி. நாட்டிகல் சயின்ஸ் பட்டப்படிப்பு ஆகியவற்றுக்கு இந்தத் தேர்வின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. கடலோர காவல்படை, கடற்படை போன்ற ராணுவ பிரிவில் நல்ல வேலைவாய்ப்பை பெற்றுத் தரும் இந்த படிப்பை தேர்வு செய்ய விரும்புபவர்கள் இது பற்றிய விரிவான விவரங்களை http://www.imu.edu.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். சென்னை, கொச்சி, கொல்கத்தா, விசாகப்பட்டினம், மும்பை துறைமுகம், நவிமும்பை போன்ற இடங்களில் கடல்சார் பல்கலைக்கழகங்கள் செயல்படுகின்றன. சில தனியார் நிறுவனங்களிலும் இந்த படிப்புகளை படிக்க முடியும்.

உடல் தகுதி அவசியம்:

ராணுவ நுழைவுத் தேர்வுகள் எளிமையாக வேலைவாய்ப்பைப் பெற்றுத் தரக்கூடியவை என்றாலும், கட்டுக்கோப்பான உடல் அமைப்பு கொண்ட திருமணமாகாத இளைஞர்களே இந்த பயிற்சியில் சேர்க்கப்படுவார்கள். இளைஞர்கள் பொதுவாக 157 சென்டிமீட்டருக்கு குறையாத உயரமும், உயரத்திற்கேற்ற எடையும் கொண்டிருக்க வேண்டும். மார்பளவு 5 செ.மீ. விரியும் திறன் பெற்றிருக்க வேண்டும். பார்வைத்திறன் நல்ல நிலையில் (6/6) இருக்க வேண்டும். நிறக்குருடு, மச்சங்கள் போன்றவை இருக்கக்கூடாது. உடல் மற்றும் உளநலமும் சீராக இருக்க வேண்டும். உடல்தகுதி சீராக இருந்து, ராணுவத்தின் கடுமையான பயிற்சியிலும் தேர்ச்சி பெறுபவர்களே பணி நியமனம் பெற முடியும். முப்படை பிரிவு பணி உள்ளிட்ட சில பிரிவுகளில் பெண்களும் சேர்க்கப்படுவார்கள்.

சராசரி மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறுபவர்கள், மற்றும் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று, கம்பீரமான உடல் அமைப்பு கொண்டவர்கள், நாட்டுக்குச் சேவை செய்யும் ராணுவ பணிகளில் சேரலாம். ராணுவ பணிகள் சமூகத்தில் நன்மதிப்பு கொண்டவை என்பதால் இளைஞர்கள் ராணுவ பணியில் சேர்வதையும் தங்கள் வாழ்க்கைப் பாதையாக (career) தேர்வு செய்யலாம்!

Next Story