காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்படாத நிலையில் வெற்றிவிழா ஏன்?


காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்படாத நிலையில் வெற்றிவிழா ஏன்?
x
தினத்தந்தி 20 Jun 2018 4:15 AM IST (Updated: 20 Jun 2018 12:25 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்படாத நிலையில் வெற்றிவிழா ஏன்? என்று எடப்பாடி பழனிசாமிக்கு மணியரசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தஞ்சாவூர்,

காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையை திறக்க முடியாது. எனவே நிலத்தடி நீர் பாசனத்தை ஊக்கப்படுத்த மின்சாரம் வழங்கப்படும் என்றும், மாற்றுப்பயிர் சாகுபடி செய்ய ஊக்கம் தரப்படும் என்றும் தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 9-ந் தேதி அறிவித்தார். 9 நாட்களுக்குள் காவிரியில் எந்த உரிமையை மீட்டார்? என்ன வெற்றி கண்டார்? எதற்காக வெற்றி விழா?

சுப்ரீம்கோர்ட்டு வருகிற 31-ந் தேதிக்குள் காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்திட காலவரம்பிட்டு இறுதி தீர்ப்பு வழங்கிவிட்டது. ஆனால் மத்தியஅரசு இதுவரை மேலாண்மை ஆணையம் அமைக்கவில்லை. மத்திய நீர்வளத்துறையின் வேறொரு பிரிவில் தலைவராக உள்ள மசூத்உசேன் என்பவரை காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூடுதல் பொறுப்பு தலைவராக அமர்த்திவிட்டு ஒதுங்கி கொண்டது மத்திய அரசு.

மேலும் மத்தியஅரசு அமர்த்த வேண்டிய 2 முழு நேர உறுப்பினர்கள், 2 பகுதி நேர உறுப்பினர்கள் மற்றும் ஒரு செயலாளர் ஆகியோரை அமர்த்தாமல் தமிழ்நாட்டிற்கு எதிராக இனப்பாகுபாடு அரசியல் நடத்தி வருகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்கள் தங்களுக்குரிய தலா ஒரு பிரதிநிதியை ஆணையத்திற்கு நியமித்துவிட்டார்கள். கர்நாடகம் மட்டும் தனது பிரதிநிதியை நியமிக்கவில்லை.

கர்நாடகம் தனது பிரதிநிதியை நியமிக்காததால் காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பதற்கு தடை ஒன்றுமில்லை. காவிரி மேலாண்மை ஆணையத்தின் சட்டப்படி அதன் செயலாளருக்கு மட்டும் ஓட்டுரிமை இல்லை. எஞ்சிய 9 பேர் பெரும்பான்மை அடிப்படையில் முடிவெடுக்க வேண்டும். ஆணையத்தில் ஒன்று அல்லது இரண்டு மாநில பிரதிநிதிகள் வராவிட்டாலும் பரவாயில்லை.

குறைந்தபட்ச வருகையாக ஓட்டுரிமையுள்ள 9 பேரில் 6 பேர் வந்திருந்தால் கூட்டத்தை நடத்தலாம். எனவே இப்போது கர்நாடக பிரதிநிதி இல்லை என்பதால் மேலாண்மை ஆணையத்திற்கு மத்தியஅரசு அமர்த்த வேண்டிய உறுப்பினர்களை அமர்த்தாமல் இருப்பதும், ஆணைய கூட்டத்தை நடத்தாமல் இருப்பதும் திட்டமிட்டு தமிழ்நாட்டை பழிவாங்குகிறது என்பதற்குரிய சான்றாகும்.

மத்தியஅரசின் இந்த பழிவாங்கலுக்கு துணை போகிறது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு. காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்திட மத்தியஅரசுக்கு தமிழகஅரசு அழுத்தம் கொடுத்து அதில் வெற்றி பெற்று ஜூன் மாதத்திற்குரிய 9 டி.எம்.சி. தண்ணீர் கர்நாடகத்தில் இருந்து திறந்து விடப்பட்டிருந்தால் ஆளும்கட்சியினர் வெற்றி விழா கொண்டாடலாம்.

காவிரி உரிமை மீட்பில் தனது தோல்வியை தானே ஒத்து கொள்ளும் வகையில் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை என அறிவித்துவிட்டு இப்போது காவிரி நதிநீர் மீட்பு போராட்ட வெற்றி விழா நடத்துவது முற்றிலும் முரண்பாடாக உள்ளது. மேட்டூர் அணையை காயப்போட்டுவிட்டு ஆற்றுநீர் பாசன குறுவையை கைவிட சொல்லிவிட்டு போலி வெற்றி விழா கொண்டாடினால் அதை ஏற்று கொள்ள மக்கள் தயாராக இல்லை என்பதை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிந்து கொள்ள வேண்டும். மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story