பணி நிரந்தரம் செய்யக்கோரி மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரதம்


பணி நிரந்தரம் செய்யக்கோரி மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 20 Jun 2018 4:30 AM IST (Updated: 20 Jun 2018 12:28 AM IST)
t-max-icont-min-icon

மின்வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்யும் தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரி திண்டுக்கல்லில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்,

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இதில் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் சுமார் 700 பேர் உள்ளனர். இவர்கள் மின்கம்பங்களை நடுதல், டிரான்ஸ்பார்மர்களை பராமரித்தல், மழைக்காலங்களில் மீட்பு பணிகளில் ஈடுபடுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்கின்றனர்.

மேலும் ஒப்பந்த அடிப்படையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருவதால், தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். எனினும், இதுவரை அவர்களின் கோரிக்கைகள் நிறைவேறவில்லை. இதைத் தொடர்ந்து தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மூலம் உண்ணாவிரத போராட்டம் நடத்த போவதாக அறிவித்தனர்.

அதன்படி திண்டுக்கல் மீனாட்சி நாயக்கன்பட்டியில் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு, ஒப்பந்த தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் திண்டுக்கல் கிளை தலைவர் உமாபதி தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் முத்துராஜ் உண்ணாவிரத்தை தொடங்கி வைத்தார்.

மாநில துணைத்தலைவர் ஜெயசீலன், மாவட்ட துணைத் தலைவர் மாரிமுத்து, சி.ஐ.டி.யு. நிர்வாகி பிரபாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். அப்போது மின்வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்யும் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். இதில் ஒப்பந்த தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். சிலர் குடும்பத்துடன் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

Next Story