சேரன்மாதேவி அருகே பயங்கரம் தொழிலாளியை மண்வெட்டியால் அடித்துக் கொன்ற மனைவி குடிபோதையில் தகராறு செய்ததால் ஆத்திரம்


சேரன்மாதேவி அருகே பயங்கரம் தொழிலாளியை மண்வெட்டியால் அடித்துக் கொன்ற மனைவி  குடிபோதையில் தகராறு செய்ததால் ஆத்திரம்
x
தினத்தந்தி 20 Jun 2018 2:30 AM IST (Updated: 20 Jun 2018 12:36 AM IST)
t-max-icont-min-icon

சேரன்மாதேவி அருகே, தொழிலாளி மண்வெட்டியால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய மனைவியை போலீசார் கைது செய்தனர்.

சேரன்மாதேவி, 

சேரன்மாதேவி அருகே, தொழிலாளி மண்வெட்டியால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய மனைவியை போலீசார் கைது செய்தனர்.

தகராறு

நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி அருகே உள்ள புலவன்குடியிருப்பு கிராமம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் ஜனார்த்தனன் (வயது 35), கூலி தொழிலாளி. அவருடைய மனைவி ராஜாமணி (34). ஜனார்த்தனனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் அவர் வீட்டுச் செலவுக்கு பணம் கொடுக்காமல் இருந்து வந்துள்ளார்.

மேலும் அவர் சரிவர வேலைக்கு செல்லாமல், வீட்டில் ராஜாமணி சேமித்து வைத்திருந்த பணத்தையும் திருடிக் கொண்டு மது குடித்து வந்துள்ளார். இதனை ராஜாமணி கண்டித்துள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

மண்வெட்டியால் தாக்குதல்

இதே போல் நேற்று காலையிலும் ஜனார்த்தனன் மது குடித்துவிட்டு வந்து மனைவியை அவதூறாக பேசியுள்ளார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

தகராறு முற்றியதில் ஜனார்த்தனை பிடித்து அவரது மனைவி ராஜாமணி கீழே தள்ளியுள்ளார். இதில் அவருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் ஆத்திரம் தீராததால், வீட்டுக்குள் இருந்த மண்வெட்டியை தேடிப் பிடித்து எடுத்துள்ளார். பின்னர் அதனை திருப்பி பிடித்துக் கொண்டு மண்வெட்டி கனையால் தலையில் ஓங்கி அடித்ததாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த ஜனார்த்தனன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

மனைவி கைது

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சேரன்மாதேவி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் ஜனார்த்தனன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ஜோஸ் வழக்குப்பதிவு செய்து ராஜாமணியை கைது செய்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மண்வெட்டி கனையால் கணவனை மனைவியே அடித்துக் கொலை செய்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story