பாளையங்கோட்டையில் மின்சார வாரிய ஊழியர்கள் உண்ணாவிரதம் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை
பாளையங்கோட்டையில் மின்சார வாரிய தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை,
மின்சார வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, பாளையங்கோட்டையில் மின்சார வாரிய தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உண்ணாவிரத போராட்டம்தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பினர் பாளையங்கோட்டை தியாகராஜ நகரில் உள்ள மின்சார வாரிய அலுவலகம் முன்பு நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். திட்ட தலைவர் பூலுடையார் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் மோகன் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்து பேசினார்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஒப்பந்த பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். மின்சார வாரியமே தொழிலாளர்களுக்கு நேரடியாக ரூ.380 கூலி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
கலந்து கொண்டவர்கள்
இதில் மாநில செயலாளர் வண்ணமுத்து, திட்ட துணை தலைவர்கள் ராமச்சந்திரன், பச்சையப்பன், திட்ட செயலாளர் பீர்முகமது ஷா, பொருளாளர் கந்தசாமி, ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் செயலாளர் கருப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.