ஆலங்குளம் அருகே வியாபாரியிடம் ரூ.1லட்சம் திருட்டு மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து மர்ம நபர் கைவரிசை
ஆலங்குளம் அருகே வியாபாரி மோட்டார் சைக்கிள் பெட்டியில் வைத்து இருந்த ரூ.1 லட்சத்தை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.
ஆலங்குளம்,
ஆலங்குளம் அருகே வியாபாரி மோட்டார் சைக்கிள் பெட்டியில் வைத்து இருந்த ரூ.1 லட்சத்தை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.
பீடி வியாபாரிஆலங்குளம் அருகே உள்ள மணல்காட்டானூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் லட்சுமணன் மகன் புகழ்ராஜன்(வயது49). பீடி வியாபாரி. இவர் நேற்று காலையில் மோட்டார் சைக்கிளில் ஆலங்குளம் சென்றார். அங்கு தொழில் விசயமாக நண்பர் ஒருவரிடம் ரூ.1 லட்சம் பணத்தை வாங்கி, மோட்டார் சைக்கிள் பெட்டியில் வைத்தார். பின்னர் அவர் ஊருக்கு திரும்பி கொண்டு இருந்தார்.
வழியில் மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் தீர்ந்து விட்டதால், ஆலங்குளம் அருகில் உள்ள பெட்ரோல் பங்க்கிற்கு அவர் சென்றார். அங்கு மற்றொரு நண்பர் வந்தார். இதை தொடர்ந்து மோட்டார் சைக்கிளை பங்க்கில் நிறுத்திவிட்டு, எதிரே உள்ள கடையில் இருவரும் டீக்குடிக்க சென்றனர்.
ரூ.1லட்சம் திருட்டுசிறிது நேரத்தில் இருவரும் திரும்பி வந்தபோது புகழ்ராஜனின் மோட்டார் சைக்கிள் பெட்டி உடைக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் பெட்டிக்குள் பார்த்தார். அங்கு வைத்திருந்த ரூ.1லட்சம் திருடப்பட்டு இருந்தது. டீக்கடைக்கு சென்று விட்டு திரும்புவதற்குள் மர்ம நபர் மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து பணத்தை திருடி சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில், சம்பவ பகுதிக்கு ஆலங்குளம் போலீசார் விரைந்து சென்றனர். அந்த பங்க்கில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
பட்டப்பகலில் பெட்ரோல் பங்க்கில் நிறுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து ரூ.1 லட்சம் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.