காதல் தகராறில் கல்லூரி மாணவருக்கு கத்திக்குத்து, 5 பேர் கைது


காதல் தகராறில் கல்லூரி மாணவருக்கு கத்திக்குத்து, 5 பேர் கைது
x
தினத்தந்தி 20 Jun 2018 3:00 AM IST (Updated: 20 Jun 2018 1:06 AM IST)
t-max-icont-min-icon

காதல் தகராறில் ஆர்.வி.எஸ். கல்லூரியில் படிக்கும் மாணவருக்கு கத்திகுத்து விழுந்தது. இது தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சூலூர்,

கோவையை அடுத்த சூலூரில் ஆர்.வி.எஸ். கல்லூரி உள்ளது. இதில் தங்கி இருந்து ஓமியோபதி 3-ம் ஆண்டு படித்து வருபவர் இளங்குமரன் (வயது 21). இவரது சொந்த ஊர் மதுரை. சம்பவத்தன்று இளங்குமரன் கல்லூரி நுழைவாயில் முன்பாக உள்ள கடையில் டீ குடிக்க சென்றார். அப்போது அங்கு காரில் வந்த ஒரு கும்பல் அவரை தாக்கி கத்தியால் குத்தியது. இதில், இளங்குமரன் ரத்தவெள்ளத்தில் கீழே விழுந்தார். இதனை பார்த்த அவரின் நண்பர்கள் ஓடிவந்தனர். அதற்குள் அந்த கும்பல் காரில் தப்பிச்சென்றது. காயமடைந்தவரை அவரது நண்பர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவரை கத்தியால் குத்திய கும்பலை வலைவீசி தேடி வருகிறார்கள். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் வெளியான தகவல்கள் வருமாறு:-

இளங்குமரனுக்கும், கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவிக்கும் இடையே காதல் இருந்துள்ளது. இதற்கு மாணவியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக இளங்குமரனை அழைத்து பேசினர். இருந்தபோதிலும் அவர் தனது காதலை கைவிட மறுத்து உறுதியாக இருந்துள்ளார். இதனால் மாணவியின் பெற்றோருக்கும், அவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இந்த காதல் விவகாரம் திருமங்கலத்தை சேர்ந்த அந்த மாணவியின் உறவினரான பாண்டி என்பவருக்கு தெரியவந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர், தனது நண்பர்களான உசிலம்பட்டியை சேர்ந்த சண்முக பிரியன் (22), சரவணக்குமார் (23), விக்னேஷ் (23), தங்கம் பிரசாந்த் (23) மற்றும் அய்யாசாமி ஆகியோருடன் வாடகை காரில் வந்து, இளங்குமரனை தாக்கி கத்தியால் குத்திவிட்டு தப்பிவிட்டனர். போலீசார் அந்த வாடகை காரின் பதிவு எண்ணை வைத்து, அந்த கும்பலை சேர்ந்த பாண்டி, சண்முக பிரியன், சரவணக்குமார், விக்னேஷ், தங்கம் பிரசாந்த் ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். தலைமறைவான அய்யாசாமியை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Related Tags :
Next Story