பாம்பன் பகுதியில் சூறாவளி காற்று: மதுரை பயணிகள் ரெயில் மண்டபத்தில் நிறுத்தம்
பாம்பன் பகுதியில் வீசி வரும் சூறாவளி காற்றால் மதுரை பயணிகள் ரெயில் மண்டபத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ராமேசுவரம்,
ராமேசுவரம் பகுதியில் 2–வது நாளாக நேற்றும் சூறாவளி காற்று வீசியது. புயலால் அழிந்து போன தனுஷ்கோடி பகுதியிலும் சூறாவளி காற்று வீசியதுடன் கடல் கொந்தளிப்பாக காணப்பட்டதால் சுற்றுலா பயணிகள் அரிச்சல்முனை வரையிலும் செல்ல தடைவிதிக்கப்பட்டதுடன் கம்பிப்பாடு கடற்கரையிலேயே அனைத்து சுற்றுலா வகனங்களும் நிறுத்தி வைக்கப்பட்டன. அரிச்சல்முனை பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்லாமல இருப்பதை தடுக்கும் வகையில் கடலோர போலீசாரும் தடுப்பு அமைத்து பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டிருந்தனர்.
தனுஷ்கோடி பகுதியில் கடல் கொந்தளிப்பால் எம்.ஆர்.சத்திரம் கடற்கரையில் உள்ள மீன்பிடி இறங்குதளத்தை தாண்டி கடல் அலைகள் சுமார் 25 அடி உயரம் வரை சீறி எழுந்தன. இதனால் தனுஷ்கோடி சாலை பல இடங்களில் மணலால் மூடப்பட்டு காட்சியளித்தது.
இதேபோல் பாம்பன் பகுதியிலும் நேற்று சூறாவளி காற்று வீசியது. பாம்பன் பாலம் உள்ள பகுதியில் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இதனால் மதுரையில் இருந்து பகல் 12.15 மணிக்கு புறப்பட்டு 3.30 மணிக்கு ராமேசுவரம் வந்து சேர வேண்டிய பயணிகள் ரெயில் மண்டபம் ரெயில்வே நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டது. மாலை 6 மணி வரையிலும் காற்றின் வேகம் குறையாததால் பயணிகள் ரெயில் அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் ரெயிலில் வந்த பயணிகள் ரெயிலை விட்டு இறங்கி பஸ்களில் ஏறி ராமேசுவரம் வந்தனர்.
மேலும் ராமேசுவரத்தில் இருந்து மாலை 5 மணிக்கு சென்னைக்கு புறப்பட வேண்டிய விரைவு ரெயிலும் மாலை 6 மணி வரை புறப்படாமல் ராமேசுவரம் ரெயில்வே நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டது.