உச்சிப்புளி கடற்படை விமானதளம் விமான நிலையமாக மாற்றப்படும் அமைச்சர் மணிகண்டன் தகவல்


உச்சிப்புளி கடற்படை விமானதளம் விமான நிலையமாக மாற்றப்படும் அமைச்சர் மணிகண்டன் தகவல்
x
தினத்தந்தி 20 Jun 2018 4:30 AM IST (Updated: 20 Jun 2018 1:06 AM IST)
t-max-icont-min-icon

உச்சிப்புளி கடற்படை விமானதளம் விரிவாக்கம் செய்யப்பட்டு விமான நிலையமாக மாற்றப்படும் என அமைச்சர் மணிகண்டன் கூறினார்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து அமைச்சர் மணிகண்டன் அனைத்து துறை அதிகாரிகளுடன் பங்கேற்ற ஆய்வுகூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் நடராஜன் தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அமைச்சர் மணிகண்டன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

ஆய்வு கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் டாக்டர் மணிகண்டன், கணிப்பாய்வு அலுவலர் சந்திரமோகன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:–

ராமநாதபுரம் மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள பணிகள் மற்றும் வரும் காலங்களில் நிவேற்றப்பட உள்ள பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டோம். மாவட்டத்தில் அமைந்துள்ள சட்டக்கல்லூரிக்கு புதிதாக இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. நீண்டகால கோரிக்கையான மருத்துவ கல்லூரி அமைப்பதற்காக அமைச்சர் என்ற முறையில் நான் வைத்த கோரிக்கையை ஏற்று முதல்–அமைச்சர் பிரதமரிடம் மருத்துவ கல்லூரி அமைக்க அனுமதி வழங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்கான அனுமதி விரைவில் கிடைக்க உள்ளது. மருத்துவ கல்லூரி அமைக்கவும், தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கவும் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ராமேசுவரம் பகுதி மக்களின் தேவை கருதி பேய்கரும்பு பகுதியில் புதிதாக அரசு கலைக்கல்லூரி அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டு அதற்காக 5 ஏக்கர் இடம் தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் அப்பகுதியில் கல்லூரி தொடங்கப்படும்.

ராமநாதபுரத்தில் இடிந்த நிலையில் உள்ள அரசு ஊழியர் குடியிருப்பு முழுமையாக அகற்றப்பட்டு புதிதாக கட்டப்பட உள்ளது. அச்சுந்தன்வயல் முதல் பட்டணம்காத்தான் வரை ரூ.25 கோடியில் தரமான சாலை அமைக்கப்பட உள்ளது. ராமேசுவரம், திருஉத்தரகோசமங்கை, திருப்புல்லாணி கோவிலை சுற்றிலும் சாலை அமைக்கப்பட உள்ளது. ராமநாதபுரம் நகர் போக்குவரத்து பணிமனை வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு அந்த இடம் புதிய பஸ்நிலையமாக விரிவாக்கம் செய்யப்படும். திருவாடானையில் புதிய பஸ் பணிமனை அமைக்கப்பட உள்ளது. இதன்மூலம் ராமநாதபுரம் புதிய போக்குவரத்து மண்டலமாக தரம் உயரும்.

இ–சேவை மையங்களின் அவசியம் கருதி முதல்கட்டமாக மாநிலம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி பகுதியில் 600 இ–சேவை மையங்கள் தனியாருக்கு புதிதாக வழங்கப்பட உள்ளது. மாவட்ட வளர்ச்சி கருதியும், சுற்றுலா பயணிகள் வருகை கருதியும் உச்சிப்புளியில் உள்ள கடற்படை விமானதளம் விரிவாக்கம் செய்யப்பட்டு பயணிகள் விமான நிலையமாக மாற்றப்பட உள்ளது. உதான் திட்டத்தின்கீழ் இந்த விமான நிலைய ஓடுதளம் 8 ஆயிரம் அடி நீளமாக விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதற்கான நிலம் கையகப்படுத்தப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story