முதியோர் இல்லம் அதிகம் தோன்றுவது சமுதாயத்திற்கு ஆரோக்கியமானதல்ல


முதியோர் இல்லம் அதிகம் தோன்றுவது சமுதாயத்திற்கு ஆரோக்கியமானதல்ல
x
தினத்தந்தி 20 Jun 2018 3:45 AM IST (Updated: 20 Jun 2018 1:08 AM IST)
t-max-icont-min-icon

முதியோர் இல்லம் அதிகளவில் தோன்றி வருவது சமுதாயத்திற்கு ஆரோக்கியமானது அல்ல என கருத்தரங்கில் கரூர் கலெக்டர் அன்பழகன் பேசினார்.

கரூர்,

கரூர் தாந்தோன்றிமலை பகுதியிலுள்ள அரசு கலைக்கல்லூரியில் (தன்னாட்சி), முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தையொட்டி கருத்தரங்கம் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக மாவட்ட கலெக்டர் அன்பழகன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

மூத்த குடிமக்கள் நம் நாட்டின் சொத்து. அவர்களை பேணி பாதுகாப்பது நமது கடமையாகும். அவர்களது அனுபவங்கள் ஒவ்வொரு கால கட்டத்திலும் நமக்கு தேவைப்படுகிறது. தங்களது வாழ்வியல் அனுபவத்தின் மூலம் வீட்டிலிருக்கும் இளையோருக்கு ஒழுக்கத்தினை அவர்கள் கற்றுக்கொடுக்கின்றனர். பெற்றோர் இருக்கும்போது மதித்து பாதுகாக்காமல் அவர்கள் இறந்த பின்பு அவர்களின் புகைப்படத்தை வைத்து மாலையிட்டு மரியாதை செலுத்துவதில் எந்த ஒரு புண்ணியமும் இல்லை.

முதியோர் இல்லம் அதிகளவு தோன்றுவது நம் சமுதாயத்திற்கு ஆரோக்கியமான தல்ல. மூத்த குடிமக்களை பாதுகாக்கவும், தனது பிள்ளைகள் கைவிட்டுவிட்டால் நடவடிக்கை எடுக்கவும் மூத்த குடிமக்கள் பாதுகாப்பு உரிமை சட்டம் உள்ளது. தேவைப்படுவோர் அதை பயன்படுத்திக்கொள்ள மாவட்ட நிர்வாகம் உதவி செய்ய தயாராக உள்ளது. வயோதிக காலத்தில் உடலில் வலிமை குறையும். குழந்தைகள் கைவிட்டுவிட்டால் மனவலிமையும் குறைந்துவிடும். சாலையை கடக்க உதவுவது, பஸ்சில் இடம் கொடுப்பது என ஒருநாள் முதியோருக்கு உதவி செய்துவிட்டு அதனை நினைத்து பெருமிதம் கொள்ளக்கூடாது. வாழ்நாள் முழுவதும் முதியோருக்கு உதவுவதை எண்ணமாக கொண்டு செயல்பட வேண்டும். இதன் மூலம் சமூகத்தில் மனிதாபிமானம் தழைத்தோங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கருத்தரங்கின் போது தற்போதைய சமூக வாழ்வில் முதியோருக்கு எவ்வாறெல்லாம் கொடுமைகள் இழைக்கப்படுகின்றன என்பது குறித்தும், அதனை தடுத்து அவர்களுக்கு அளிக்க வேண்டிய ஆதரவு குறித்தும் மாணவ-மாணவிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. முன்னதாக நடந்த முதியோர் பராமரிப்பு என்ற தலைப்பில் நடைபெற்ற கட்டுரைப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு நிகழ்ச்சியின்போது கலெக்டர் பரிசுகளை வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், கல்லூரி முதல்வர் ஜோதிவெங்கடேஷ்வரன், மாவட்ட சமூக நல அதிகாரி வள்ளியம்மை, வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி, வட்டாட்சியர் கலியமூர்த்தி, சமூகநல பாதுகாப்பு அதிகாரி பார்வதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திலிருந்து முதியோர்களுக்கு எதிராக கொடுஞ்செயல் எதிர்ப்பு தின ஊர்வலத்தை கலெக்டர் அன்பழகன் தொடங்கி வைத்தார். ஊர்வலமானது தாந்தோன்றிமலை பகுதி வழியாக சென்றது. அப்போது முதுமை என்பது ஒரு பருவம் தான்... அதனை அனைவரும் கடந்து செல்ல வேண்டும் என்பதை மறவாதே... முதியோர் குழந்தைகளை போன்றவர்கள்... அவர்களிடம் கோபம் கொள்ளாதே... என்பன உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி அரசு கல்லூரி மாணவ- மாணவிகள் பங்கேற்றனர். முடிவில் அரசு கல்லூரி வளாகத்தில் ஊர்வலம் நிறைவு பெற்றது.

Next Story