ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நாட்டு வெடிகுண்டுகளுடன் ஒருவர் சிக்கினார்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 7 நாட்டு வெடிகுண்டுகளுடன் ஒருவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நாட்டு வெடிகுண்டுகள் புழக்கத்தில் இருப்பதாக விருதுநகர் மாவட்ட வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன், சார்பு ஆய்வாளர் மோகன் தலைமையில் தனிப் படை அமைத்து உத்தரவிட்டார்.
இந்த தனிப்படையினர் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள ராக்காச்சியம்மன் கோவில் பகுதியில் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ராஜபாளையம் கணபதி சுந்தரநாச்சியார்புரம் கிராமத்தைச் சேர்ந்த நல்லுராஜ் (வயது 43) என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் வன விலங்குகளை வேட்டையாட பயன்படுத்தும் 7 நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து வெடிகுண்டுகள் மற்றும் அதனை கடத்த பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளுடன் நல்லுராஜை போலீசார் மம்சாபுரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து நல்லுராஜை கைது செய்தனர். பின்னர் மம்சாபுரம் போலீஸ் நிலையம் வந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன், நல்லுராஜூடம் தீவிர விசாரணை மேற்கொண்டார்.