கவுரி லங்கேஷ் கொலையில் கைதானவர்களை போலீஸ் துன்புறுத்தியது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு


கவுரி லங்கேஷ் கொலையில் கைதானவர்களை போலீஸ் துன்புறுத்தியது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்  கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 19 Jun 2018 9:30 PM GMT (Updated: 19 Jun 2018 8:52 PM GMT)

கவுரி லங்கேஷ் கொலையில் கைது செய்யப்பட்ட 4 பேரை போலீஸ் துன்புறுத்தியது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மாஜிஸ்ரேட்டுகளுக்கு கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

பெங்களூரு, 

கவுரி லங்கேஷ் கொலையில் கைது செய்யப்பட்ட 4 பேரை போலீஸ் துன்புறுத்தியது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மாஜிஸ்ரேட்டுகளுக்கு கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

போலீசார் அடித்து துன்புறுத்தினர்

பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கடந்த 2017–ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து சிறப்பு விசாரணை குழு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் கர்நாடக ஐகோர்ட்டில் வக்கீல் அம்ருதேஷ் என்பவர் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்தார். அதில் கவுரி லங்கேஷ் கொலையில், அமோல்காலே, சுஜீத்குமார், அமீத் ராமச்சந்திரா டெக்வேகர், மனோகர் எடவே ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவரை போலீஸ் காவலின்போது, போலீசார் அடித்து துன்புறுத்தினர். சிறை கைதிகள் போலீஸ் காவலில் இருக்கும்போது சுப்ரீம் கோர்ட்டு வகுத்த நடைமுறைகளை பின்பற்றுவதில் மாஜிஸ்திரேட்டும் தோல்வி அடைந்துவிட்டார். போலீஸ் துன்புறுத்தியது குறித்து மருத்துவ பரிசோதனை நடத்துமாறு கடந்த 14–ந் தேதி எடுத்து கூறியபோதும், மாஜிஸ்திரேட்டு மறுத்துவிட்டார். மேலும் அந்த கைதியின் உடலில் உள்ள அடையாளங்களை தான் பதிவு செய்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.

அறிக்கை வழங்க வேண்டும்

மற்ற 3 கைதிகளுக்கு போலீசார் துன்புறுத்தியது குறித்தும் கூடுதல் தலைமை மெட்ரோ பாலிடன் கோர்ட்டு மாஜிஸ்திரேட்டிடம் தெரிவித்தபோதும், அவரும் அலட்சியம் செய்துவிட்டதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசாரின் இந்த சட்டவிரோத நடவடிக்கை குறித்து விசாரணை நடத்த வேண்டும். பாதிக்கப்பட்ட 4 கைதிகளுக்கும் தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடுமாறு கோரப்பட்டுள்ளது. அந்த மனு கர்நாடக ஐகோர்ட்டில் நீதிபதி பனிந்திரா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, கைதிகளை போலீசார் துன்புறுத்தியது குறித்து சம்பந்தப்பட்ட 2 மாஜிஸ்ரேட்டுகளும் 10 நாட்களுக்குள் அறிக்கை வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். இந்த தகவலை பதிவாளர் மூலம் அந்த மாஜிஸ்ரேட்டுகளுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் அவர் உத்தரவில் கூறி இருக்கிறார்.


Next Story