விழுப்புரம் முதன்மை கல்வி அலுவலகத்தில் கலந்தாய்வை ரத்து செய்யக்கோரி ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்


விழுப்புரம் முதன்மை கல்வி அலுவலகத்தில் கலந்தாய்வை ரத்து செய்யக்கோரி ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 19 Jun 2018 10:30 PM GMT (Updated: 19 Jun 2018 9:09 PM GMT)

பணிநிரவல் கலந்தாய்வை ரத்து செய்யக்கோரி விழுப்புரம் முதன்மை கல்வி அலுவலகத்தில் ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர்.

விழுப்புரம், 

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களை பணிநிரவல் அடிப்படையில் இடமாறுதல் செய்வதற்காக முதன்மை கல்வி அலுவலகங்களில் ஆன்-லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் செய்வதற்கான கலந்தாய்வு நேற்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதற்காக விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்துக்கு விழுப்புரம் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் 300-க்கும் அதிகமான பட்டதாரி ஆசிரியர்கள் வந்திருந்தனர். சிலர் கைக்குழந்தைகளுடனும் வந்திருந்தனர்.

ஆனால் சென்னையில் உள்ள பள்ளி கல்வித்துறை அலுவலகத்தில் இருந்து மாவட்டத்தில் உள்ள பணிநிரவலுக்கான காலிப்பணியிடங்கள், கலந்தாய்விற்கு விண்ணப்பித்த ஆசிரியர்களின் பெயர் பட்டியல் போன்ற விவரங்கள் எதுவும் ஆன்-லைன் மூலம் வரவில்லை.

இதனால் காலை 9 மணி முதல் முதன்மை கல்வி அலுவலகத்தில் காத்திருந்த பட்டதாரி ஆசிரியர்கள் சோர்வடைந்து அலுவலக வளாகத்திலேயே படுத்தனர்.

ஆனால் மாலை 6 மணி ஆகியும் பள்ளி கல்வித்துறை அலுவலகத்தில் இருந்து தகவல் எதுவும் வராததால் ஆத்திரமடைந்த பட்டதாரி ஆசிரியர்கள் மாலை 6.15 மணி அளவில் முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பணி நிரவல்முறை கலந்தாய்வை ரத்து செய்யக்கோரி கோஷம் எழுப்பினர்.

பின்னர் முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு 9 மணி ஆகியும் பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தில் இருந்து பெயர் பட்டியல் வரவில்லை. இதனால் ஆசிரியர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.

இதுகுறித்து ஆசிரியர்கள் கூறுகையில், நாங்கள் அனைவரும் காலை 9 மணி முதல் கலந்தாய்வுக்காக காத்திருக்கிறோம். இதுவரை சென்னையில் இருந்து பட்டியல் எதுவும் வரவில்லை. இதனால் இதில் முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளது. அதுமட்டுமின்றி பணிநிரவல் முறையில் குளறுபடியும் உள்ளது. எனவே இந்த கலந்தாய்வை ரத்து செய்ய வேண்டும் என்றனர்.

இதன் பின் இரவு 10-10 மணிக்கு பட்டியல் ஒட்டப்பட்டு, 10-20 மணிக்கு கலந்தாய்வு தொடங்கியது.

இப்போராட்டத்தால் முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story