கார்-மோட்டார் சைக்கிள்கள் அடுத்தடுத்து மோதல்: டாஸ்மாக் மேற்பார்வையாளர் உள்பட 2 பேர் பலி


கார்-மோட்டார் சைக்கிள்கள் அடுத்தடுத்து மோதல்: டாஸ்மாக் மேற்பார்வையாளர் உள்பட 2 பேர் பலி
x
தினத்தந்தி 20 Jun 2018 4:45 AM IST (Updated: 20 Jun 2018 3:28 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சத்திரம் அருகே கார்-மோட்டார் சைக்கிள்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் டாஸ்மாக் மேற்பார்வையாளர் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பரங்கிப்பேட்டை,

விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள சிந்தாமணிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சடகோபன் மகன் பலராமன்(வயது 38). கிள்ளை அடுத்த மேல்அனுவம்பட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக பணி புரிந்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் டாஸ்மாக் கடையை பூட்டிவிட்டு, அங்கிருந்து ஒரு மோட்டார் சைக்கிளில் சொந்த ஊருக்கு புறப்பட்டார்.

சிதம்பரம்-கடலூர் சாலையில் புதுச்சத்திரம் அடுத்த பெரியபட்டு மாதா கோவில் அருகே சென்றபோது, கடலூரில் இருந்து சிதம்பரம் நோக்கி சென்ற கார் ஒன்று, பலராமன் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் பலராமன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

அந்த சமயத்தில் பி.முட்லூரில் இருந்து கடலூர் நோக்கி பின்னால் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக, விபத்துக்குள்ளான பலராமனின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த கடலூர் சேடப்பாளையத்தை சேர்ந்த செங்கேணி மகன் தமிழ்ச்செல்வன்(34) என்கிற விவசாயி படுகாயமடைந்தார்.

இதைபார்த்த அந்த வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே தமிழ்ச்செல்வன் பரிதாபமாக உயிரிழந்தார்.

அடுத்தடுத்து நடைபெற்ற விபத்து பற்றி தகவல் அறிந்த புதுச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, விபத்தில் பலியான பலராமனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பலராமனின் அண்ணன் கண்ணையன் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story