குடும்பத்தகராறு: மனைவியை வெட்டியவர் கைது
குடும்பத்தகராறு காரணமாக மனைவியை அரிவாள்மனையால் வெட்டியவர் கைது செய்யப்பட்டார்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த பானம்பாக்கத்தை சேர்ந்தவர் சம்பத் (வயது 48). இவருக்கு செல்வி (28) என்ற மனைவி உள்ளார். இந்த நிலையில் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்வி தன்னுடைய குழந்தையுடன் பெரியபாளையம் பேட்டை மேடு பகுதியில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்றார். நேற்று முன்தினம் அவர் பானம்பாக்கத்திற்கு வந்தார்.
அப்போது அங்கிருந்த சம்பத் தன்னுடைய மனைவியிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டு அவரை தகாத வார்த்தையால் பேசி அவரையும், குழந்தையையும் அடித்து உதைத்தார்.
கைது
பின்னர் சம்பத் வீட்டில் இருந்த அரிவாள்மனையை எடுத்து தன்னுடைய மனைவியின் கழுத்தில் வெட்டினார். இதில் காயம் அடைந்த அவர் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து செல்வி கடம்பத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story