புள்ளிலையன் ஊராட்சியில் குடியிருப்பு பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதால் பொதுமக்கள் அவதி
புள்ளிலையன் ஊராட்சியில் குடியிருப்பு பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதால் அவதிக்குள்ளாகும் பொதுமக்கள்.
செங்குன்றம்,
திருவள்ளூர் மாவட்டம் புழல் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள புள்ளிலையன் ஊராட்சியில் பாலாஜி கார்டன், சாந்தி காலனி, புதுநகர் உள்ளிட்ட பல்வேறு குடியிருப்புகள் உள்ளன.
இங்கு உள்ள வீடுகளில் இருந்து பெறப்படும் குப்பைகளை ஊராட்சி ஊழியர்கள் பாலாஜி கார்டன் குடியிருப்பு பகுதிக்கு அருகே கொட்டி விடுகின்றனர். இதனால் அங்கு குப்பைகள் மலை போல் குவிந்துகிடக்கின்றன.
மேலும், ஊராட்சி ஊழியர்கள் மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் என தரம் பிரித்து பெறாமல் மொத்தமாக குப்பைகளை சேகரித்து கொட்டுகின்றனர். இதனால் இறைச்சி கழிவுகள் போன்ற குப்பைகள் கொட்டப்படும் போது அவை அழுகி கடும் துர்நாற்றம் வீசுகிறது.
கழிவு நீர் கால்வாய்
அதோடு பாலாஜி கார்டன் பகுதியில் கொட்டப்படும் குப்பைகளில் மர்ம ஆசாமிகள் சிலர் அவ்வப்போது தீவைத்து விடுகின்றனர். இதனால் ஏற்படக்கூடிய புகைமண்டலம் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துகொள்கிறது.
அந்த புகையை மக்கள் சுவாசிக்கிற போது அவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்படுகிறது. இதனால் அவர்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க புள்ளிலையன் ஊராட்சியில் உள்ள கழிவு நீர் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு, கழிவு நீர் வெளியேறி குடியிருப்பு பகுதிகளில் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பொதுமக்கள் கோரிக்கை
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும், திருவள்ளூர் மாவட்ட கலெக்டரிடமும் பல முறை புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தங்களுடைய நிலைமையை கவனத்தில் கொண்டு குடியிருப்பு பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்கவும், கழிவுநீர் கால்வாய்களை சீரமைக்கவும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story