பெருந்துறையில் சிப்காட் தொழிற்சாலைகள் பாதிப்பு குறித்த ஆய்வு கூட்டம்


பெருந்துறையில் சிப்காட் தொழிற்சாலைகள் பாதிப்பு குறித்த ஆய்வு கூட்டம்
x
தினத்தந்தி 21 Jun 2018 4:30 AM IST (Updated: 21 Jun 2018 12:20 AM IST)
t-max-icont-min-icon

பெருந்துறையில் சிப்காட் தொழிற்சாலைகள் பாதிப்பு குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் கே.சி.கருப்பணன் பங்கேற்றார்.

பெருந்துறை,

பெருந்துறை சிப்காட் தொழிற்சாலைகளின் பாதிப்பு குறித்த ஆய்வு கூட்டம் பெருந்துறையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பெருந்துறை சிப்காட் பகுதி மக்கள் கூறிய புகார்களை சாய, தோல் தொழிற்சாலைகள் 60 நாட்களுக்குள் சரிசெய்யப்படவேண்டும். இல்லையெனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சிப்காட்டுக்கு செல்லும் 18 வழிகளிலும் சோதனைச்சாவடி அமைத்து கண்காணிக்கப்படும். சோதனைச்சாவடி அமைக்க ஏற்படும் செலவுகளை தொழிற்சாலை உரிமையாளர்கள் ஏற்றுக்கொள்வதாக கூறியுள்ளனர்.

அதுதவிர சிப்காட் பிரதான நுழைவு வாயில் பகுதியில் காவல் துறை சோதனைச்சாவடி அமைக்கப்படும். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு முறையாக நடவடிக்கை எடுத்து உள்ளது. கோர்ட்டு அரசுக்கு மேலானதாக உள்ளது. அங்கு அனுமதி பெற்றால் அரசால் ஒன்றும் செய்யமுடியாது.

சேலம் 8 வழிச்சாலையை பொதுமக்களோ, விவசாயிகளோ எதிர்க்கவில்லை. சமூக ஆர்வலர் என்ற போர்வையில் சிறு, சிறு விவகாரங்களை கூட பெரிதாக்குகின்றனர். அரசால் ஆண்டு தோறும் 65 லட்சம் மரக்கன்றுகள் நடப்படுகிறது. 8 லட்சம் மரங்களை வெட்டினால் தவறில்லை. இந்த சாலை அமையப்பெற்றால் சுங்கம் வசூலிப்பது குறித்து அரசு தான் முடிவெடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன், ஆர்.டி.ஓ நர்மதாதேவி, சுற்றுச்சூழல் பொறியாளர் சரவணக்குமார், பெருந்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்குமார், தாசில்தார் வீரலட்சுமி மற்றும் மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், தொழிற்சாலை உரிமையாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story