தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமிலம் அகற்றும் பணி இன்னும் 2 நாளில் முடிக்கப்படும் கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமிலம் அகற்றும் பணி இன்னும் 2 நாளில் முடிக்கப்படும் கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
x
தினத்தந்தி 21 Jun 2018 3:30 AM IST (Updated: 21 Jun 2018 12:23 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமிலத்தை அகற்றும் பணி இன்னும் 2 நாளில் முடிக்கப்படும் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமிலத்தை அகற்றும் பணி இன்னும் 2 நாளில் முடிக்கப்படும் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.

கந்தக அமிலம் அகற்றும் பணி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி கடந்த மாதம் 22–ந்தேதி கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டம் நடந்தது. அப்போது ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து 28–ந்தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. அதன்படி ஆலை நிரந்தரமாக மூடி ‘சீல்‘ வைக்கப்பட்டது.

இந்த நிலையில் ஆலையில் உள்ள கந்தக அமிலம் சேமிப்பு கன்டெய்னரில் திடீர் கசிவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து ஆய்வு செய்த அதிகாரிகள் கந்தக அமிலத்தை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்தனர். அதன்படி, டேங்கர் லாரிகளில் கந்தக அமிலம் ஏற்றப்பட்டு ஸ்டெர்லைட் நிறுவனம் மூலம் பல்வேறு தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. நேற்று வரை சுமார் 400 டன் கந்தக அமிலம் அகற்றப்பட்டு உள்ளது. தொடர்ந்து அமிலத்தை அகற்றும் பணி நடந்து வருகிறது.

இதுகுறித்து கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறியதாவது:–

15 டேங்கர் லாரிகள்

ஸ்டெர்லைட் ஆலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரசாயன கசிவு இருப்பதாக தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் குழுவினர் 100 சதவீதம் முழுமையான ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கந்தக அமிலம் சேகரித்து வைக்கப்பட்டு இருந்த கன்டெய்னரில் சிறிய கசிவு இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கந்தக அமிலத்தை அப்புறப்படுத்தும் பணி தொடங்கப்பட்டது.

ஆலையில் சுமார் 1,000 டன் கந்தக அமிலம் உள்ளது. இந்த கந்தக அமிலம் டேங்கர் லாரிகள் மூலம் அகற்றப்பட்டு வருகிறது. இதுவரை 15 டேங்கர் லாரிகளில் கந்தக அமிலம் ஏற்றப்பட்டு பல்வேறு தொழிற்சாலைகளுக்கு கொடுக்கப்பட்டு உள்ளன. அந்த பணியை தொடர்ந்து செய்து வருகிறோம். அமிலத்தை எடுப்பதற்காக மின்சார வசதி, மோட்டார் வசதி செய்து உள்ளோம். 100 சதவீதம் அமிலத்தை வெளியேற்றும் வரை அதிகாரிகள் தலைமையில் பணி நடந்து கொண்டே இருக்கும்.

2 நாட்களில்...

இன்று (அதாவது நேற்று) காலையில் 5 லாரிகளில் கந்தக அமிலம் ஏற்றும் பணி நடந்தது. அமிலத்தை ஏற்றுவதற்கான பிரத்யேக லாரிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. லாரிகள் கிடைப்பதை பொறுத்து இன்னும் 2 நாட்களில் இந்த பணியை முடிக்க திட்டமிட்டு உள்ளோம்.

இந்த அமிலத்தை ஸ்டெர்லைட் நிறுவனம் வழக்கம் போல் தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வருகிறது. மாவட்ட நிர்வாகம் ஆலையில் இருந்து அமிலத்தை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கையை மட்டும் மேற்கொள்கிறது. முதல்கட்டமாக கந்தக அமிலம் அகற்றப்படுகிறது. ஆலையில் உள்ள பாஸ்பாரிக் அமிலம் குறித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.


Next Story