சிறுமலையில் தலையில் கல்லை போட்டு புதுப்பெண் கொலை


சிறுமலையில் தலையில் கல்லை போட்டு புதுப்பெண் கொலை
x
தினத்தந்தி 21 Jun 2018 4:30 AM IST (Updated: 21 Jun 2018 12:41 AM IST)
t-max-icont-min-icon

சிறுமலையில், தலையில் கல்லை போட்டு புதுப்பெண் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய கணவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

திண்டுக்கல்,

திண்டுக்கல்லை அடுத்த சிறுமலை பழையூர் அருகே காட்டுப்பகுதியில் இளம்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக திண்டுக்கல் தாலுகா போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன்பேரில், புறநகர் போலீஸ் துணை சூப்பிரண்டு கோபால் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர், அங்கு சென்ற போலீசார் பிணத்தை கைப்பற்றினர்.

அந்த பெண் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அந்த பெண் சிறுமலை அண்ணாநகரை சேர்ந்த ரேணுகா (வயது 19) என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவர், அதே பகுதியை சேர்ந்த சுப்பையா மகன் ராமையா (23) என்பவரை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளார்.

ராமையா, சரக்கு வேன் ஓட்டி வந்துள்ளார். இந்தநிலையில், நேற்று மதியம் இருவரும் அந்த வாகனத்தில் பழையூரில் இருந்து தாழக்கடையை நோக்கி சென்றுள்ளனர். பின்னர் அங்குள்ள சாலையோரத்தில் வேனை நிறுத்திவிட்டு காட்டுப்பகுதிக்குள் நடந்து சென்றனர்.

இதன்பின்னரே, அந்த பெண் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இதனால், அவருடைய கணவரே தலையில் கல்லை போட்டு கொலை செய்துவிட்டு தப்பி ஓடியிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இதுதொடர்பாக, தலைமறைவாக உள்ள ராமையாவை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story