ஈரானில் தவிக்கும் தமிழக மீனவர்கள் 21 பேரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கலெக்டர் அலுவலகத்தில் மனு


ஈரானில் தவிக்கும் தமிழக மீனவர்கள் 21 பேரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கலெக்டர் அலுவலகத்தில் மனு
x
தினத்தந்தி 20 Jun 2018 11:15 PM GMT (Updated: 20 Jun 2018 7:24 PM GMT)

ஈரானில் தவிக்கும் தமிழக மீனவர்கள் 21 பேரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெற்காசிய மீனவர் தோழமை சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

நாகர்கோவில்,

குமரி மாவட்டம் புத்தன்துறை குமார், கடியபட்டணம் ஆரோக்கியராஜ், கேசவன்புத்தன்துறை சகாய மைக்கில், ராஜாக்கமங்கலம்துறையைச் சேர்ந்த ஜோசப், சூசை, பிரான்சிஸ், யேசுதாசன், சேவியர் ஆகிய 8 மீனவர்கள், நெல்லை மாவட்டம் பெருமணலைச் சேர்ந்த செல்வகஸ்பார், சந்தியாகு, இயேசு இக்னேசியஸ், ஆன்றனி மிக்கேல், ஆன்றனி சந்தியாகு, கூட்டப்புளியைச் சேர்ந்த மரிய ஜோசப், கூட்டபனையைச் சேர்ந்த மார்க்வார்க் ஆகிய 7 பேரும், தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டிய பட்டணத்தைச் சேர்ந்த பெனிட்டோ, சேவியர், சுஜய் பெர்னாண்டஸ், விக்டர், பிரசாந்த், அஜில்டன் ஆகிய 6 பேரும் என மொத்தம் 21 மீனவர்கள் ஈரான் நாட்டுக்கு சென்று மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.

இந்தநிலையில் அங்கு தங்க இடமின்றி, உணவின்றி, 3 நாட்களாக தெருக்களில் தங்கி அவதிப்பட்டு வருவதாக தங்கள் உறவினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து தெற்காசிய மீனவர் தோழமை குமரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆன்றோ லெனின் தலைமையில், தோழமை பொதுச்செயலாளர் அருட்பணியாளர் சர்ச்சில், தெற்கு எழுத்தாளர் இயக்கம் திருத்தமிழ் தேவனார், சமம் குடிமக்கள் இயக்கம் கடிகை ஆன்றனி, மீனவர் இயக்கம் புதூர் பாபு மற்றும் ஈரானில் தவிக்கும் குமரி மாவட்ட மீனவர்களின் உறவினர்கள் ஆகியோர் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் 21 பேரும் கடந்த 6 மாதங்களாக ஈரான் நாட்டில் முகமது சலா என்ற அரேபிய முதலாளிக்கு சொந்தமான 3 விசைப்படகுகளில் மீன்பிடி தொழில் செய்து வந்தனர். இவர்கள் ஈரான் நாட்டில் நகி தக்கி என்ற துறைமுகத்தில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு 6 மாதமாக மீன்பிடித்ததற்கான கூலியை முறையாக வழங்கவில்லை என்றும், போதுமான உணவு வழங்கவில்லை என்றும் கூறப்படுகிறது. கடந்த 18-ந் தேதி அன்று 21 மீனவர்களும் எங்களுக்கு உரிய கூலியை தரவேண்டும் என்று கேட்டுள்ளனர்.

அதற்கு அரேபிய முதலாளி மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் மீன்பிடிக்க செல்ல முடியாது என்று மீனவர்கள் கூறியுள்ளனர். உடனே ஆத்திரமடைந்த அரேபிய முதலாளி, 21 மீனவர்களையும் வீட்டில் இருந்து வெளியே தள்ளி, அவர்களது பொருட்களையும் வெளியே வீசி வீட்டை பூட்டியுள்ளார். மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லும் விசைப்படகையும் பூட்டியுள்ளார்.

இந்த சூழ்நிலையால் 21 மீனவர்களும் கடந்த 3 நாட்களாக இரவும், பகலும் வீதியில் தவித்து வருகிறார்கள். அவர்களுடைய பாஸ்போர்ட்டையும் அந்த முதலாளி பறிமுதல் செய்து வைத்துள்ளார். எனவே அவர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவிக்கிறார்கள். அவர்களை மீட்டு உடனடியாக நாடு திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story