சுங்குவார் சத்திரம், வந்தவாசி கோவில்களில் ரூ.80 கோடி மதிப்புள்ள சிலைகளை திருடியவர் கைது
சுங்குவார்சத்திரம், வந்தவாசி கோவில்களில் ரூ.80 கோடி மதிப்புள்ள சிலைகளை திருடியவரை சிலை திருட்டு தடுப்புப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
திருச்சி,
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே ராமனுஜபுரம் கிராமத்தில் மணிகண்டேஸ்வரர் கோவிலில் இருந்த சிவன், பார்வதி சிலைகளும், திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே சவுந்தரியபுரம் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் இருந்த ஆதிகேசவ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய 3 சிலைகளும், வந்தவாசி அருகே பையூர் கிராமத்தில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் இருந்து பிரசன்ன வெங்கடேச பெருமாள் உள்ளிட்ட 8 சிலைகள் கடந்த 2015–ம் ஆண்டில் திருட்டு போனது.
இது குறித்து அந்தந்த பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்களில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் கடந்த மாதம் 14–ந் தேதி சிலை திருட்டு தடுப்புப்பிரிவு போலீஸ் ஐ.ஜி.பொன்மாணிக்கவேல், சப்–இன்ஸ்பெக்டர் ஜூலியஸ்சீசர் ஆகியோர் சென்னை மாம்பழத்தில் ஆட்டோவில் சென்றனர். அப்போது சந்தேகத்துக்கிடமான ஒருவர் மோட்டார் சைக்கிளில் மூட்டையை வைத்து கொண்டு சென்றார். அவரை தடுத்து நிறுத்தி அந்த மூட்டையை பிரித்து சோதனை நடத்தினார்கள். அப்போது அதில் 8 சிலைகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து அந்த நபரிடம் நடத்திய விசாரணையில் அவர், தனலிங்கம் என்பதும், அந்த சிலைகள் சுங்குவார்சத்திரம், வந்தவாசி, பையூர் ஆகிய பகுதிகளில் உள்ள கோவில்களில் திருடப்பட்டது என்பதும், சிலைகளை விற்பதற்காக கொண்டு சென்றதும் தெரியவந்தது. மேலும் இந்த சிலைகளை சென்னையை சேர்ந்த காவாங்கரை ஜெய்குமார் என்கிற குமார் தலைமையில் திருடி உள்ளனர் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து சிலை திருட்டு தடுப்புபிரிவு போலீசார் குமாரை தீவிரமாக தேடி வந்தனர். இது பற்றி அறிந்த அவர் முன்ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். அங்கு கடந்த 2016–ம் ஆண்டு நவம்பர் மாதம் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து தலைமறைவாக இருந்த குமாரை நேற்று அதிகாலை ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையில், போலீஸ் துணை சூப்பிரண்டு சுந்தரம், இன்ஸ்பெக்டர்கள் ரவி, வினாயகமூர்த்தி, ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் கைது செய்தனர்.
மீட்கப்பட்ட சிலைகள் ரூ.80 கோடி மதிப்புடையவையாகும். கைது செய்யப்பட்ட குமார் வேறு ஏதாவது கோவிலில் சிலை திருட்டில் ஈடுபட்டுள்ளாரா? என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.