எர்ணாவூர் ரவுண்டானாவில் கன்டெய்னர் லாரி மோதி புதுமாப்பிள்ளை பலி
எர்ணாவூர் ரவுண்டானாவில் மோட்டார் சைக்கிள் மீது கன்டெய்னர் லாரி மோதி புதுமாப்பிள்ளை பரிதாபமாக இறந்தார்.
திருவொற்றியூர்,
எண்ணூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் ராகேஷ் (வயது 26). மீனவரான இவருக்கு, கடந்த 2 மாதங்களுக்கு முன்புதான் ஜோதி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.
புதுமாப்பிள்ளையான ராகேஷ், காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன்பிடிக்க சென்றுவிட்டு நேற்று முன்தினம் இரவு காசிமேட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் தனது வீட்டுக்கு வந்து கொண்டு இருந்தார்.
எர்ணாவூர் ரவுண்டானாவில் வந்தபோது பின்னால் வந்த கன்டெய்னர் லாரி ஒன்று திடீரென அவரது மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ராகேஷ், அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.
டிரைவர் கைது
இதுபற்றி தகவல் அறிந்து வந்த மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், பலியான ராகேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து கன்டெய்னர் லாரி டிரைவரான திருவண்ணாமலையை சேர்ந்த சதீஷ்குமார் (38) என்பவரை கைது செய்தனர்.
விபத்து நடைபெற்ற எர்ணாவூர் ரவுண்டானா பகுதியில் போக்குவரத்து சிக்னல், வேகத்தடை எதுவும் கிடையாது. இதனால் வேகமாக வரும் கன்டெய்னர் லாரி உள்ளிட்ட வாகனங்களால் அந்த பகுதியில் அடிக்கடி இதுபோல் விபத்துகள் ஏற்பட்டு உயிர் பலி ஏற்படுகிறது. பலமுறை இதுபற்றி புகார் தெரிவித்தும் வேகத்தடை, சிக்னல் அமைக்க போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதன்காரணமாக அடிக்கடி இதுபோல் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இனியாவது உடனடியாக போக்குவரத்து சிக்னல் மற்றும் வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story